Wednesday,10th of October 2012
சென்னை::விலங்குகளை வைத்து ஷூட்டிங் நடத்தியதால் இரண்டாம் உலகம் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் படம் இரண்டாம் உலகம். இப்படத்தின் 90 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது. இந்நிலையில் படத்துக்கு திடீரென விலங்குகள் நல வாரியம் மூலம் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் வேட்டைக்காரன் வேடத்தில் ஆர்யா நடிக்கிறார். படத்தில் சில காட்சிகளை காட்டு பகுதிகளில் விலங்குகளை வைத்து செல்வராகவன் படமாக்கியுள்ளார். படத்தில் பயன்படுத்திய சில விலங்குகளுக்கு மட்டும் அனுமதி பெற்றதாகவும் சில விலங்குகளுக்கு அனுமதி பெறாமல் ஷூட்டிங் நடத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்து விலங்குகள் நல வாரியம் படக்குழுவிடம் விளக்கம் கேட்டிருப்பதாக இப்பட வட்டாரங்கள் தெரிவித்தன. விலங்குகளை கொடுமைப்படுத்துவது போல் காட்சிகள் இடம்பெற்றால் சென்சாரில் படத்துக்கு அனுமதி கிடைக்காது. படத்திலிருந்து அக்காட்சிகளை நீக்கிய பின்பே அனுமதி கிடைக்கும். அத்துடன் விலங்குகள் நல வாரியத்தில் குறிப்பிட்ட விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற மருத்துவ சான்றிதழை வழங்க வேண்டும். இரண்டாம் உலகம் படத்தை டிசம்பரில் திரையிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற விலங்குகள் சம்பந்தமான சில காட்சிகளை வெட்டிவிட்டு, அதை கிராபிக்சில் உருவாக¢க செல்வராகவன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments
Post a Comment