Tuesday,2nd of October 2012
சென்னை::ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றிய இருவன் படம் அப்படியொரு படம் வந்ததா எனும் அளவுக்கு ஒரே நாளில் ஓடிப்போனது. சாருலதாவும் சுனாமியாக வந்து சுண்டெலியாக சுருண்டு கொண்டது. போட்டிக்கு யாருமில்லை என்ற தெம்பில் மாற்றான் டீம் பத்திரிகையாளர்களை நேற்று ரெசிடென்சி டவர்ஸில் சந்தித்தது. அந்த பிரஸ்மீட்டில் சூர்யா படம் குறித்துப் பேசியதும், நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும் உங்களுக்காக.
நான் எடுக்கிற ஒவ்வொரு முடிவையும் கவனமாக எடுக்க வேண்டிய காலகட்டம் இது. ஒவ்வொரு முடிவும் சரியாக இருக்கிறதா என பலமுறை யோசித்து ரொம்ப கவனமாக செயல்படுகிறேன். என்னுடைய ஒவ்வொரு முடிவும் என்னுடைய கேரியரை தீர்மானிக்கக் கூடியது. அப்படி எடுத்த ஒரு முடிவுதான் மாற்றான்."
மாற்றான் மற்ற கேரக்டர்களிலிருந்து எந்த விதத்தில் ஸ்பெஷல்?
"எந்த கேரக்டரையும் ஒரு நடிகரால் ஒரு எல்லை வரைதான் கொண்டு செல்ல முடியும். ஆனால் கே.வி.ஆனந்த் அதனை இன்னும் மெருகேற்றி தருவார். இந்தப் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவி என்பதால் அவரது உதவி ரொம்பவே தேவைப்பட்டது. காக்க காக்க அன்புச்செல்வன், கஜினி சஞ்சய் ராமசாமி கேரக்டர்களை ரிச் லுக் கொடுத்து சமாளித்து விடலாம். ஆனால் இது போன்ற கேரக்டர்களில் நடிக்கும் போது நடிகனாக நிறைய தேடல் இருக்கிறது. பிதாமகன் சக்தி கேரக்டரை உள்வாங்கி நடித்தேன். அது போலதான் மாற்றானும்."
இரண்டு கேரக்டர்களும் எப்படி...?
"இந்தப் படத்தில் அகிலன், முகிலன்ங்கிற இரண்டு கேரக்டரில் வர்றேன். இதில் முகிலன் என்னை மாதிரி சாது. ஆனா அகிலன் வரைமுறையற்ற கேரக்டர். எனக்கே ரொம்பப் புதுசு. ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்பது முக்கியமான பகுதிதான். ஆனா அதைத் தாண்டி சகோதரப் பாசத்தையும், அப்பா மகன் உறவையும் புதிய கோணத்தில் அலசியிருக்கிறோம். சமூக நலன் சார்ந்த கருவும் படத்தில் இருக்கிறது. ஒரே கண்ணோட்டத்துடன் படமில்லை இது."
இந்தப் படம் காப்பி என்கிறார்களே...?
"இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து அது அந்தப் படத்தின் காப்பி இந்தப் படத்தின் காப்பின்னு இணையத்தில் கமெண்ட் எழுதினாங்க. அதைப் படிச்சப் பிறகுதான் அந்தப் படங்களை தேடிப் பிடித்துப் பார்த்தேன். ஆனா அந்தப் படங்களுக்கும் மாற்றானுக்கும் சம்பந்தமேயில்லை. எந்தப் படத்தையும் காப்பி அடிக்க வேண்டிய அவசியமோ, நடிப்பை காப்பி பண்ண வேண்டிய அவசியமோ எங்களுக்கு இல்லை. இந்தப் படத்துக்காக ஒன்றரை வருட உழைப்பை தந்திருக்கேன். எல்லோரும் டீமா உழைச்சிருக்கோம். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும்."
மாற்றானில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். அடுத்த சாதனை என்ன?
"இது ஒரு புதிய முயற்சி, புது அனுபவம். ஆனா இதனை சாதனைன்னு எல்லாம் சொல்ல முடியாது. ஒரு புதிய முயற்சி அவ்வளவுதான்."
இரட்டையர்களாக நடித்ததால் இரண்டு சம்பளம் வாங்கினீர்களா...?
"அப்படியெல்லாம் இல்லை, ஒரே சம்பளம்தான் வாங்கினேன்."
Comments
Post a Comment