Friday,5th of October 2012
சென்னை::ஜுரம் படுத்தும் பாட்டால் தனுஷ், தமன்னா ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. தனுஷ் முதன்முறையாக இந்தியில் நடிக்கும் படம் ‘ராஞ்சனா’. ஆனந்த் எல் ராய் டைரக்ட் செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் காசியில் நடந்து வந்தது. இதற்காக காசி சென்ற தனுஷ் அங்கேயே தங்கி ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். கடந்த வாரம் தனுஷுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு டைபாய்டு காய்ச்சல் வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை ஓய்வு எடுக்கும்படி டாக்டரும், இயக்குனரும் கூறினர். காய்ச்சல் விட்டதும் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்கு வசதியாக காசியிலேயே தங்கி இருக்கிறார் தனுஷ். அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள மனைவி ஐஸ்வர்யா காசி சென்றிருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதேபோல் தமன்னா நடிக்கும் இந்தி படம் ‘ஹிம்மத்வாலா’. அஜய் தேவ்கன் ஹீரோ. இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அஜய் தேவ்கன் காய்ச்சலால் அவதிப்பட்டார். ஜுரத்துடன் நடிக்க எண்ணியபோது பட யூனிட்டில் உள்ள தொழில் நுட்ப கலைஞர்களும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. காய்ச்சல் மற்றும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வருகிறார் அஜய் தேவ்கன். இந்த பாதிப்பு குடிநீர் மாசுவினால் ஏற்பட்டிருக்கிறது என்று டாக்டர் கூறினார். ‘இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதும் பட குழுவினர் அனைவருக்கும் பாட்டிலில் சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும்’ என்றார் அஜய் தேவ்கன்.
Comments
Post a Comment