Tuesday,2nd of October 2012
சென்னை::நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 84வது பிறந்தநாள் விழா, சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் நேற்று மாலை நடந்தது. ஜி.ராம்குமார் வரவேற்றார். தமிழக கவர்னர் ரோசய்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முதலில் சிவாஜி நடித்த சில படங்களின் காட்சி தொகுப்புகள் திரையிடப்பட்டது. அவற்றை ரோசய்யா பார்த்து கைத்தட்டி ரசித்தார்.
பிறகு டாக்டர் சிவாஜி கணேசன் நினைவுப் பரிசை இயக்குனர் கே.பாலசந்தர், தவில் வித்வான் வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிர மணியம், பழம்பெரும் நடிகர் கே.வி.ஸ்ரீனிவாசன், டாக்டர் டி.எஸ்.நாராயணசாமி, நடிகை காஞ்சனா ஆகியோருக்கு ரோசய்யா வழங்கினார். மேலும், ரோட்டரி கிளப் மெட்ராஸ் அமைப்புக்கு 54 ஆயிரமும், செவாலியே சிவாஜி கணேசன் கல்வி அறக்கட்டளைக்கு 50 ஆயிரமும் நன்கொடை வழங்கப்பட்டது.
விழாவில் ரோசய்யா பேசியதாவது: நடிகர் திலகம் சிவாஜிகணேசனிடம் நேரம் தவறாமை, எளிமை, இரக்கத்தன்மை, விருந்தோம்பல் போன்ற நற்குணங்கள் நிறைந்து காணப்பட்டன. எந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறாரோ அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் இயல்புடையவர் சிவாஜி. கர்ணன், திருவிளையாடல் போன்ற படங்கள் தற்போது டிஜிட்டல் முறைக்கு கொண்டு வரப்பட்டு பல நாட்கள் ஓடியுள்ளது, சிவாஜி கணேசன் இன்றளவும் ரசிகர்கள் உள்ளத்தில் குடிகொண்டுள்ளார் என்பதையே காட்டுகின்றன. தனது திறமையை வெளிக்காட்டியதே அவரது வெற்றியின் ரகசியமாக இருந்தது.
சிவாஜி கணேசன் எனக்கு நல்ல நண்பராக விளங்கினார். ஆந்திராவில் நடந்த தேர்தல் பிரசாரங்களில் அவர் கலந்து கொண்டார். நான் சினிமா பார்ப்பது இல்லை. ஆனால், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை 4 முறை பார்த்தேன். சிவாஜி விருது பெறும் கலைஞர்கள் மேலும் பல சாதனைகளை புரிய வாழ்த்துகிறேன். இவ்வாறு ரோசய்யா பேசினார். விழாவில் எஸ்.பி.முத்து ராமன், ராஜேஷ், பிரபு சாலமன், லிங்குசாமி, விக்ரம் பிரபு, கே.வி.பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரபு நன்றி கூறினார்.
Comments
Post a Comment