பிடிவாரண்ட் உத்தரவு: நீதிமன்றத்தில் நடிகர் பாக்கியராஜ் சரண்!!!

Wednesday,24th of October 2012
சென்னை::தேர்தல் வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையொட்டி, கமுதி நீதிமன்றத்தில், நடிகர் பாக்கியராஜ் திங்கள்கிழமை சரணடைந்தார்.
 கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, முதுகுளத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வ.சத்தியமூர்த்தியை ஆதரித்து கமுதி, பெருநாழி ஆகிய ஊர்களில் நடிகர் பாக்கியராஜ் 29-3-2011-ல் பிரசாரம் செய்தார்.
 அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி அதிக எண்ணிக்கையில் வாகனங்களில் சென்றதாக நடிகர் பாக்கியராஜ், வேட்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் பெரும்பாலானோர் கமுதி நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீனில் வெளியே வந்தனர். ஆனால் நடிகர் பாக்கியராஜ், கமுதி நீதிமன்றத்தில் சரண டையாததால், அவரை கைது செய்யும்படி போலீஸாருக்கு கமுதி நீதிமன்ற குற்றவியல் நடுவர் பி.எஸ்.கெüதமன் உத்தரவிட்டார்.
 இதையடுத்து கமுதி நீதிமன்றத்தில் நடிகர் பாக்கியராஜ் அக்.22-ம் தேதி பகல் 11 மணியளவில் வழக்குரைஞர் கே.ரமேஷ் கண்ணனுடன் வந்து குற்றவியல் நடுவர் கெளதமன் முன்னிலையில் சரணடைந்தார்.
 அவரை ரூ.3,000 பிணையத் தொகை செலுத்தி, 2 தனி நபர்கள் ஜாமீனை ஏற்று, விடுவித்தார். மேலும் நவ.23-ல் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி குற்றவியல் நடுவர் கெளதமன் உத்தரவிட்டார்.

Comments