ரஜினிக்கு பிறகு விஜய்யிடம் அந்த மனப்பாங்கு உள்ளது! - நெகிழ்கிறார் தாணு!!!

Friday,19th of October 2012
சென்னை::பிரமாண்டங்களுக்கு முதலில் பேசப்படும் பெயர் தயாரிப்பாளர் எஸ்.தாணு. விளம்பரங்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் இன்று வரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. யார் படத்தில் தொடங்கி இப்போது வெளிவர இருக்கும் துப்பாக்கி படம் வரை அவரது பிரமாண்டம் தொடர்கிறது. ஆனால் இவருக்கும் இடையில் சில சறுக்கல்கள் வந்தன. இருந்தும் அதை எல்லாம் முறியடித்து இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு துப்பாக்கி படம் மூலம் களம் இறங்கி இருக்கிறார். துப்பாக்கி படத்தை பற்றி பல செய்திகள் வந்தாலும், அதில் நடித்த விஜய் பற்றியும், அவர் செய்த உதவியை பற்றி தான் இன்றைய கோடம்பாக்கம் முழுவதும் ஒலித்து கொண்டு இருக்கிறது. அப்படி என்ன செய்தார் விஜய் என்று கேட்கிறீர்களா...?


துப்பாக்கி படம் துவங்கிய பிறகு தாணு அவர்களுக்கு நிதி நெருக்கடி வந்ததாம். எங்கே தன்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் பணப்பிரச்னையில் சிக்கி ஷூட்டிங் நின்றுபோய்விடுமோ என்று நினைத்த விஜய், தாணுவின் நிலையை புரிந்து கொண்டு அவரை வரவழைத்து ரூபாய் எதுவும் நிரப்பப்படாத காசோலை ஒன்றை கொடுத்து எவ்வளவு வேண்டுமோ எடுத்து கொள்ளுங்கள் என்றாராம். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லையாம் தாணு.

இதுப்பற்றி தாணுவிடம் கேட்டபோது, சிவாஜி படத்தில் ரஜினி நடித்த போது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வாங்கி கொண்டு நடித்தார். படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகுதான் தனக்குரிய சம்பளத்தை பெற்றுக்கொண்டார். அந்தளவுக்கு ஒரு தயாரிப்பாளரின் கஷ்டத்தை உணர்ந்தவர் ரஜினி. அவருக்கு பிறகு விஜய்யிடம் அந்த மனப்பாங்கு இருக்கிறது. ரஜினி ரூபத்தில் விஜய்யை பார்க்கிறேன் என்று நெகிழ்கிறார்.

Comments