நாயகன் பட விவகாரம் முக்தா சீனிவாசன் நோட்டீஸ் : கமல் விளக்கம்!!!

Monday,22nd of October 2012
சென்னை::மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் ‘நாயகன். இதை முதலில் முக்தா சீனிவாசன் தயாரித்தார். பின்னர் வேறு நிறுவனத்துக்கு படம் கைமாறியது. இப்படம் உருவாகி 25 வருடம் ஆனதையடுத்து ஆங்கில பத்திரிகையொன்றிற்கு கமல் பேட்டி அளித்திருந்தார். அதில், ‘முக்தா சீனிவாசனின் நிறுவனத்துக்காக நாயகன் படம் நடிக்க முடிவு செய்தேன். மணிரத்னம் இயக்கினார். மும்பையில் ஷூட்டிங் என்றதும் சற்று தயக்கம் காட்டி சீனிவாசன் சம்மதித்தார். பின்னர் சண்டை காட்சிகளை சர்வதேச தரத்துடன் எடுக்க இயக்குனர் முடிவு செய்தபோது அதற்கு சீனிவாசன் சம்மதிக்கவில்லை. பட்ஜெட்டை தாண்டி செலவு செய்ய முடியாது என்று கூறிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முக்தா சீனிவாசன் கண்டனம் தெரிவித்து கமலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: நல்ல சினிமா செய்வதற்கு தடைகள் நிறையவும், ஆதரவு கொஞ்சமும் இருக்கத்தான செய்கிறது. எங்கள் கூட்டு முயற்சியின் வெற்றிக்கு வயது 25. மணிரத்னம், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், தோட்டா தரணி, பாலகுமாரன், புதுமைப்பித்தன், சரிகா இவர்கள் போக அமைதியாய் தொண்டரடி பொடியாய் வேலை செய்தவர்களையும் ஆரம்பத்திலிருந்தே ஆதரவும், மூலதனமும், விமர்சனமும், கோபமும் கண்டிப்பும் நிறைந்த முக்தா சீனிவாசனையும் தன் கர்மத்தை செய்து காலமான ராமசாமியையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. என்றென்றும் அவர்களுக்கு எங்கள் நன்றியை செலுத்துகிறோம். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Comments