Sunday,7th of October 2012
சென்னை::அமிதாப்பச்சனின் 70 வது பிறந்த நாளுக்கு வரும்படி ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அக். 11ம் தேதி 70 வயது பிறக்கிறது. இதை பிரமாண்ட விழாவாக நடத்த திட்டமிட்டுள்ளார் அவரது மனைவி ஜெயா பச்சன். இதற்கான விழா மும்பையில் உள்ள திரைப்பட நகரில் நடக்கிறது. ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினியும் அமிதாப்பும் கடந்த 30 ஆண்டாக நெருங்கிய நண்பர்கள். இதையடுத்து ரஜினியை விழாவில் பங்கேற்க கேட்டிருக்கிறார் ஜெயா பச்சன். அவரும் குடும்பத்தினருடன் பங்கேற்பதாக கூறி இருக்கிறார்.
இரவு 8.30 மணிக்கு விழா தொடங்குகிறது. நடிகர், நடிகைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 11 மணிக்கு இரவு பார்ட்டி தொடங்குகிறது. இதற்கான அழைப்பிதழில் விருந்துக்கான கார்டும் இணைக்கப்பட்டிருக்கிறது. அமிதாப் நடத்திய குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. அவர்கள் சேர்ந்து அமிதாபுக்கு சிறப்பு பரிசை அளிக்க உள்ளனர்.
Comments
Post a Comment