'வழக்கு எண்' படத்தில் நடித்த சிறுவன் 6 வருடங்களுக்கு பின் மீட்பு: டி.வி.யில் படம் பார்த்து பெற்றோர் கண்டுபிடித்தனர்!!!
Saturday, 6th of October 2012
சென்னை::'வழக்கு எண் 18/9' படத்தில் நடித்த அன்பு என்ற 12 வயது சிறுவனை 6 வருடங்களுக்கு பின்பு பெற்றோர் மீட்டுள்ளனர். அன்பு 6 வயதில் காணாமல் போனான். சென்னை தெருக்களில் அழுதபடி சுற்றி திரிந்த அவனை மனநலம் குன்றிய இல்ல நிர்வாகிகள் தூக்கி வந்து காப்பகத்தில் சேர்த்தனர்.
2006 முதல் எழும்பூரில் உள்ள அரசு பாலவிகார் இல்லத்தில் வளர்ந்து வந்தான். மனநலம் குன்றிய அச்சிறுவனை இயக்குனர் பாலாஜி சக்திவேல் 'வழக்கு எண் 18/9' படத்தில் நடிக்க வைத்தார்.
கதாநாயகியின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சிறுவனாக நடித்தான். இப்படம் வினாயகர் சதுர்த்தியன்று டி.வி.யில் ஒளிபரப்பானது. திருப்பூரில் வசிக்கும் மில் தொழிலாளி லோகநாதனும் அவரது மனைவியும் படத்தை பார்த்தனர்.
அதில் நடித்துள்ள சிறுவன் அன்பு தங்கள் மகன் என்று அடையாளம் கண்டனர். உடனடியாக சென்னை புறப்பட்டு வந்து பாலாஜி சக்திவேலை சந்தித்தார்கள். அன்பு சிறுவயதில் காணாமல் போன தங்கள் மகன் என கூறினார்.
அவர்களை பாலாஜி சக்திவேல் குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்து சென்றார். அங்கு பிறப்பு சான்றிதழ் போன்ற ஆதராங்களை காட்டி சிறுவன் அன்புவை மீட்டு அழைத்து சென்றார்கள்.
இதுகுறித்து பாலாஜி சக்திவேல் கூறும்போது சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்ததன் மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆஸ்கார் விருது பெற்றது போன்ற ஆனந்தத்தில் திளைத்தேன் என்றார்.
Comments
Post a Comment