தாண்டவம் கதைத் திருட்டும் - சில அந்தர் பல்டிகளும்!!!

Saturday, 29th of September 2012
சென்னை::தாண்டவம் கதைத் திருட்டு கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. இயக்குனர்கள் சங்கம் என்ற சினிமா சங்கத்தில் இயக்குனர்களுக்கும், உதவி இயக்குனர்களுக்கும் இடையே உள்ள ஆழமான பிளவை இந்த விவகாரம் மேலே கொண்டு வந்துள்ளது. இந்தப் பிரச்சனையை முன்னிறுத்தி மேலும் பல பிரச்சனைகள் வெளிவரவும், அலசப்படவும் வாய்ப்புள்ளது. இதற்கு பிள்ளையார் சுழிபோட்ட தாண்டவம் கதைத் திருட்டு குறித்துப் பார்ப்போம்.

ராதாமோகனின் உதவி இயக்குனரான பொன்னுசாமி பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவரைப் பற்றிய கதையை தயார் செய்து யு டிவி தனஞ்செயனிடம் கூறியிருக்கிறார். கதையை கேட்டவர் அப்புறம் பார்க்கலாம் என்று வழியனுப்பியிருக்கிறார். கவனிக்கவும், கதை நன்றாக இல்லை என்று அவர் கூறவில்லை.
இதனால் பொன்னுசாமி தனஞ்செயனிடமிருந்து அழைப்பு வரும் முதல் படத்தை தொடங்கலாம் என்று ஆர்வத்தோடு காத்திருந்திருக்கிறார். ஆனால் வந்தது யு டிவி தயா‌ரிப்பில் விஜய் இயக்க விக்ரம் நடிக்கும் தாண்டவம். இதில் விக்ரம் கண் தெ‌ரியாதவராக நடிக்கிறார் என்ற விவரம் படம் ஏறக்குறைய முடிந்த பிறகே தெ‌ரிய வந்தது. பொன்னுசாமி பதறிப் போனார். கண் தெ‌ரியாவிட்டாலும் காதால் பொருட்களின் எதிரொலியை கேட்டு கண் தெ‌ரியாத குறை தெ‌ரியாமல் சாகஸங்கள் செய்யும் நாயகனை வைத்தே பொன்னுசாமி கதை செய்திருந்தார். அது அப்படியே தாண்டவத்தில் இருந்தது.

தான் ஏமாற்றப்பட்டது தெ‌ரிந்ததும் பொன்னுசாமி பிரச்சனையை இயக்குனர்கள் சங்கத்துக்கு எடுத்துப் போனார். அதன் பிறகே தாண்டவம் அண்ட் கோ விழித்துக் கொண்டது. பல்டிகள் அடிக்க ஆரம்பித்தார் தனஞ்செயன். தெய்வத்திருமகள் படத்தின் போதே விஜய் இந்தக் கதையை தன்னிடம் சொன்னதாக கூறினார். இன்னொரு சமயம் நீரவ்ஷஅமெ‌ரிக்காவில் உள்ள டேனியல் கிஷ் பற்றி சொன்னார், அதை வைத்து உருவாக்கிய கதையிது என்று பிளேட்டை திருப்பிப் போட்டார். உச்சகட்டமாக பொன்னுசாமி சொன்னது கண் தெ‌ரியாத ஒருவர் பழி வாங்குகிற கதை. இதை இயக்குனர் சுபாஷ் சபாஷ் என்ற பெய‌ரில் ஏற்கனவே பார்த்திபனை வைத்து எடுத்திருக்கிறார், நியாயப்படி சுபாஷ்தான் பொன்னுசாமி மீது புகார் தர வேண்டும் என்று சுக்கானை பொன்னுசாமி மீது ஏற்றப் பார்த்தார். இதன் பிறகு பொன்னுசாமியின் ஸ்கி‌ரிப்டும், விஜய்யின் ஸ்கி‌ரிப்டும் இயக்குனர்கள் சங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

உதவி இயக்குனர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த சங்கத்தில் நடந்தவை யு டிவி என்ற பெருநிறுவனத்துக்கு குடை பிடிக்கும் விஷயங்களாகவே இருந்தன. விசாரணை விஷயங்கள் படு ரகசியமாக வைக்கப்பட்டன. இரண்டு ஸ்கி‌ரிப்டும் ஒன்றா இல்லை வேறு வேறஎன்பதைக்கூட தெ‌ளிவாக அறிவிக்கவில்லை. இரண்டு ஸ்கி‌ரிப்ட்களை படித்து முடிவு எடுக்க அதிகபட்சமாக இரண்டு நாள் போதும். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே காலதாமதம் செய்தனர். இந்த நேரத்தில் தாண்டவத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்கி ‌ரிலீஸுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்தன. இயக்குனர்கள் சங்கம் பிரச்சனை முடியும்வரை தாண்டவம் பட வேலைகளை நிறுத்தி வைத்திருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில், பல கோடி முதலீடு செய்திருக்கிறார்கள், அது பாதிக்கப்படும் என்று பெருநிறுவனத்தின் நலனே முக்கியமாகப் பேசப்பட்டது.
படம் ‌ரிலீஸ் தேதியை நெருங்கினால் நீதிமன்றம் படத்துக்கு தடை விதிக்காது என்பதை தெ‌ரிந்தே இயக்குனர்கள் சங்கம் காலதாமதம் செய்தது. கடைசியில் அவர்கள் கைவி‌ரித்த போது பொன்னுசாமி நீதிமன்றத்தை நாடினார். அவர்கள் எதிர்பார்த்தது போல், பல கோடி நஷ்டமாகிவிடும் என்று சொல்லி நீதிமன்றம் படத்தை இன்று வெளியிட அனுமதி அளித்து விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

இந்த விவகாரத்தில் அமீர் பொதுச் செயலாளராக இருக்கும் இயக்குனர்கள் சங்கம் நடந்து கொண்டவிதம் பொன்னுசாமி உள்ளிட்ட உதவி இயக்குனர்களின் முதுகில் குத்துவதாகவே இருந்தது. இதனால் கோபம் கொண்ட உதவி இயக்குனர்களின் புதிய அலைகள் அணியைச் சேர்ந்த ஏழு செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் பதவியை ரா‌ஜினாமா செய்தனர். மேலும் சங்கத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஜனநாதன், கரு.பழனியப்பன் முக்கியமாக அமீர். இந்த மூவரும் துரோகம் செய்துவிட்டதாக உதவி இயக்குனர்கள் வெளிப்படையாக குற்றம்சாற்றியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சங்கத்தின் நலனை பாதுகாக்க என்று தியாகி போர்வையில் ஒரு அறிக்கை வெளியிட்டு பதவியை ரா‌ஜினாமா செய்திருக்கிறார் அமீர்.

Comments