Saturday,22nd of September 2012
சென்னை::ஷூட்டிங்கை நிறுத்தச் சொல்லி திவ்யா வேன்மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு, அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து நேற்று முன்தினம் எதிர்கட்சிகள் பாரத் பந்த் நடத்தின. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டதுடன், மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அன்றைய தினம் நடிகை திவ்யா இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க மைசூர் சென்றார். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திவ்யாவின் வேனை வழிமறித்தனர். ஷூட்டிங்கிற்கு செல்லக்கூடாது என்று தடுத்தனர். வேன் மீது கற்களும் வீசப்பட்டன. இதையடுத்து வேனை நிறுத்திய திவ்யா ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேசினார். ‘ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கண்ணியத்தை நீங்கள் மீறக்கூடாது’ என்று கூறினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதுபற்றி திவ்யா கூறும்போது,‘ஷூட்டிங்கை நிறுத்த எந்த விதிமுறையும் இடம்கொடுக்கவில்லை. போராட்டம் என்ற பெயரில் கற்களை வீசுவது, மற்றவர்களுக்கு இடையூறு செய்வதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடக்கூடாது. எந்த போராட்டமாக இருந்தாலும் அமைதியாக நடத்த வேண்டும். சினிமாவை பொறுத்தவரையில் தினமும் வேலை செய்தால்தான் சம்பளம் பெறும் தினக்கூலி தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஷூட்டிங் நடக்காத பட்சத்தில் அவர்களுக்கு சம்பளம் கிடைக்காது. இதனால் பாதிக்கப்படுவார்கள். இதை போராட்டம் செய்பவர்கள் மனதில் கொள்ள வேண்டும்’ என்றார்.
Comments
Post a Comment