நடிகை ரம்யா நம்பீசனின் பசிக்கு கிடைத்த 'பீட்சா'!!!

Sunday,9th of September 2012
சென்னை::அழகும், அம்சமும் நிறைந்த நடிகை. இதுவரை நடித்ததும் நல்லப் படங்கள் தான் என்றாலும், நடிகை ரம்யா நம்பீசனுக்கு கோடம்பாக்கம் கொடுத்திருக்கும் அடையாளம் ராசியில்லா நடிகை என்பதுதான். இந்த அடையாளத்தை வைத்துகொண்டு கோடம்பாக்கத்தில் எப்படியாவது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ரம்யாவின் பசிக்கு கிடைத்திருக்கிறது 'பீட்சா'.

"மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தும், தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நான் இன்னும் பிடிக்க வில்லை. 'பீட்சா' படம் வெளியானப் பிறகு கோடம்பாக்கத்தில் எனக்கும் ஒரு அந்தஸ்து கிடைக்கும்." என்று ரம்யா நம்பீசன் கூறினார். அவர் கூறியது உண்மைதான் என்று உணர்த்தியது இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டில் திரையிடப்பட்ட பாடல்களும், டிரைலரும். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பாடல் காட்சியில் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியுடன் மிக நெருக்கமாக நடித்திருக்கிறார் ரம்யா நம்பீசன்.

இந்த நெருக்கமான நடிப்பு தான் தன்னை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாரோ என்னவோ!. ஏன் இப்படி நடித்தீர்கள்? என்று கேட்டால், "கதைக்கு தேவைப்பட்டது அதனால் தான் இப்படி நெருக்கமாக நடித்தோம். படத்தைப் பார்த்தால் உங்களுக்கே அது புரியும்." என்கிறார் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி.

இது ஒரு திரில்லரான காதல் கதையாம்.பீட்சா டெலிவரி பண்ணுவதற்காக ஹீரோ ஒரு வீட்டிற்கு செல்கிறார். அங்கு நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் கதை. இப்படத்தை இயக்கியிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ் என்ற புதுமுகம். இவர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாதவர். குறும்படங்கள் இயக்கி தனது திறமையை நிரூபித்து இந்த படத்தின் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

அது என்ன 'பீட்சா' எங்கே போனது தமிழ்? என்று இயக்குநரிடம் கேட்டால், "பீட்சா என்பது இத்தாலி நாட்டு பிரபலமான ஒரு உணவு. அங்கே அந்த உணவை அழைப்பது போலதான் இங்கேயும் அழைக்கிறார்கள். நமது தோசையை ஆங்கிலத்திலும் தோசா என்று தான் சொல்லுவர்கள். அதுபோல தான் இதுவும் பீட்சா என்பது ஒரு உணவின் பெயர் தான். அதனால் இதை தமிழக அரசு ஏற்றுகொள்ளும் என்று நம்புகிறோம். இந்த தலைப்பும் எங்கள் கதைக்கு பொருத்தமாக இருந்ததால் வைத்துவிட்டோம். என்று விளக்கம் அளித்தார்.

'அட்டகத்தி' படத்தை தயாரித்த குமார் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் இது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். அட்டகத்தி படத்தில் கானா பாடல் பாடி கலக்கிய கானா பாலா இந்த படத்தில் ஜாஸில் ஒரு வித்தியாசமான பாடலை பாடியிருக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Comments