
சென்னை::'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரையுலகினர் "இளையராஜாவை இயக்குநர் கெளதம் உச்சத்தில் ஏற்றியிருக்கிறார்." என்று பாராட்டினார்கள்.
நீதானே என் பொன்வசந்தம்' படத்திற்காக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், முதல் முறையாக இளையராஜாவுடன் இணைந்திருக்கிறார். ஜீவா, சமந்தா நடித்திருக்கும் இப்படம் காதல் கதையாகும். இப்படத்தின் பாடல்கள் லண்டனின் உள்ள புகழ்பெற்ற ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதற்காக இளையராஜா லண்டன் சென்று அங்குள்ள இசைக் கலைஞர்களுடன் பணியாற்றினார். கெளதம் - இளையராஜா கூட்டணியில் உருவான இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. இப்படத்தின் இசை உரிமையும் பெரும் விலைக்குப் போனது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. இயக்குநர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, வாசு, சமுத்திரக்கனி, லிங்குசாமி, தரணி, கே.வி.ஆனந்த், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஹங்கேரி நாட்டில் இருந்து வரவைக்கப்பட்ட இசைக் கலைஞர்கள் இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து சில பாடல்களின் இசையையும், நீதானே என் பொன்வசந்தம் படத்தில் இடம்பெற்ற பாடல்களையும் மேடையில் நேரடியாக இசைத்தனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர்கள் பலரும் இளையராஜாவுடன் தாங்கள பணியாற்றிய அன்பவத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார்கள். அப்போது அவர்கள் பேசுகையில் "இயக்குநர் கெளதம் இளையராஜாவுக்கு மிகப்பெரிய கெளரவத்தை கொடுத்திருக்கிறார்." என்றார்கள்.
இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "இளையராஜா ஏற்கனவே உச்சத்திற்கு சென்றுவிட்டார் என்றாலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் இயக்குநர் கெளதம் அவரை மேலும் உச்சத்தில் ஏற்றிவிட்டிருக்கிறார். கெளதமை நல்ல இயக்குநராக எனக்கு தெரியும். இப்போது தான் அவர் ஒரு சிங்கம் என்பதை தெரிந்துகொண்டேன். இதுபோன்ற ஒரு கெளரவத்தை இளையராஜாவுக்கு கொடுத்ததற்காக அவருக்கு எனது பாராட்டுக்கள்." என்றார்.
யுவன் சங்கர் ராஜா பேசும் போது, "இதுபோன்ற ஹங்கேரி இசைக் கலைஞர்களை வைத்து ஒரு இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பது அப்பாவின் நீண்ட நாள் கனவு. அதை கெளதம் நினைவாக்கியிருக்கிறார் அவருக்கு எனது நன்றிகள்." என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, "இந்த படத்திற்கு நான் இசையமைக்க வேண்டும் என்று கேட்டு கெளதம் என்னிடம் வந்தபோது அவர் என்னிடம் "சார் இந்த படத்தின் பாடலை உலகில் எங்கு வேண்டுமானும் சென்று நீங்கள் ஒலிப்பதிவு செய்யலாம்." என்று சொன்னார். அப்போதே எனக்கு அவர் என்ன எதிர்ப்பார்க்கிறார் என்று புரிந்துவிட்டது." என்றார்.
நிகழ்ச்சி ஆரம்பத்தின் போது ரசிகர்கள் யாரும் விசில் அடிக்க கூடாது என்று இளையராஜா வேண்டுகோள் வைத்தார். அதுதான் ஹங்கேரி இசைக் கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை என்றும், அதிக பட்சமாகப் போனால் கைதட்டுங்கள். விசில் அடிக்காதீர்கள். என்று கூறினார்.
மேலும் நிகழ்ச்சியில் இளையராஜாவிடம், இயக்குநர் கெளதம் மேனன் கேள்விகள் சில கேட்டார். அதற்கு இளையராஜா சுவாரஸ்யமாக பதில் அளித்தார். அதேபோல கெளதம் தேர்வு செய்து வைத்திருந்த சில பாடல்களையும் இளையராஜா பாடினார்.
Comments
Post a Comment