ஸ்டார்களுடன் நடித்த ஹீரோயின் உடலை ஊருக்கு அனுப்ப கூட காசு இல்லை!!!

Monday,24th of September 2012
சென்னை::சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த நடிகை அஸ்வினியின் உடலை ஊருக்கு அனுப்ப கூட காசு இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டது. பார்த்திபன் இயக்கி நடித்த ‘பொண்டாட்டி தேவை படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அஸ்வினி (36). ரஜினியுடன் ‘பாபா,  விஜய்யுடன் ‘பிரண்ட்ஸ், மற்றும் தெலுங்கில் நாகார்ஜுனா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இவர் கவிஞர் புவியரசு பேரனை மணந்தார். கடந்த சில வருடங்களாக நுரையீரல் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாரடைப்பால் அவர் மரணம் அடைந்தார்.

படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தபோதும் வறுமையில் வாடினார் அஸ்வினி. கஷ்டப்பட்டு மகனை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். இந்நிலையில் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் அவதிப்பட்டார். நடிகர் பார்த்திபன் மகன் ராக்கி, அஸ்வினி மகன் கார்த்திக்கும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். இதனால் அஸ்வினியின் மருத்துவ செலவுக்கு உதவும்படி பார்த்திபனிடம் ராக்கி கூறினார். இதையடுத்து ரூ.10 ஆயிரம் ரூபாய் சிகிச்சை செலவுக்கு அளித்தார். நேற்று அஸ்வினி இறந்த நிலையில் அவரது உடலை சொந்த ஊரான நெல்லூருக்கு எடுத்துச் செல்ல பணம் இல்லாமல் கார்த்திக் தவித்தார். பிறகு பார்த்திபனும் அவரது மகனும் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அஸ்வினி உடலை நெல்லூருக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிருந்தாவன் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது. கார்த்திக்கின் படிப்பு செலவை பார்த்திபன் ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

Comments