'விஸ்வரூபம்' படத்தில் பயன்படுத்தப்படும் 'ஆரோ 3டி' தொழில்நுட்பம்!!!

Friday,21st of September 2012
சென்னை:::கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் 'விஸ்வரூபம்' திரைப்படத்தில் 'ஆரோ 3டி' (AURO 3D) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3டி தொழில்நுட்பத்தின் மூலம் படம் பார்ப்பவர்கள் பெறும் அனுபவத்தை காட்டிலும், பல நிலைக்கு சிறந்த திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும் 'ஆரோ 3டி' தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் பயன்படுத்துவது இது தான் முதல் முறையாகும். இதுபற்றி கமல்ஹாசன் கூறுகையில், "ஆரோ 3டி தொழிநுட்பம், திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை மேலும், பல படிநிலைகளுக்கு உயர்த்தி பெரும் கிளர்ச்சியை நமக்களிக்கிறது. இந்த ஆரோ 3டி தொழில்நுட்பத்தை விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக நம் பார்வையாளர்களுக்கு நாங்கள் கொண்டு வருவதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். மற்ற தொழில்நுட்பங்களை போல் அல்லாது, ஆரோ 3டி இயங்குதளத்தின் செயல் உருவாக்கமும், மிகக்குறைந்த நிறுவுதல் நேரமும் இதன் பெரும் சிறப்பு. என்னுடைய நண்பர் வில்ஃரைட் (Wilfried) உருவாக்கிய ஆரோ 3டி தொழில் நுட்பம், இந்திய திரைப்பட ரசிகர்களுக்கும் பயன்படும் வகையில், பல நல்ல திரை அரங்குகளும், அதன் நிர்வாகிகளும் வளர்ச்சி மனோபாவத்தோடு இதை எடுத்துச் செல்ல முன்னோக்கி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விஸ்வரூபம் திரைப்படத்தின் வெளியீட்டு நாள் பற்றி பல புரளிகள் பரவி வருகின்ற இவ்வேளையில், என்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் இருந்து மட்டுமே இது குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகும் என உறுதியளிக்கிறேன்." என்று தெரிவித்தார்.

Comments