இயக்குநர் எஸ்.பி.எம், நடிகை சச்சுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!!

Thursday,23rd of August 2012
சென்னை::'நம் உரத்த சிந்தனை' தமிழ் மாத இதழின் பதினோறாம் ஆண்டு விழாவை முன்னிட்டு திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மற்றும் பழம்பெறும் நடிகை குமாரி.சச்சுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

'நம் உரத்த சிந்தனை' தமிழ் மாத இதழின் பதினோறாம் ஆண்டு விழா ஹைதராபாத்தில் உள்ள இரவீந்திர பாரதி கலையரங்கில் சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்த் திரையுலகில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகை சச்சு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு திரையுலக ஜாம்பவான்களான நடிகர் ஏ.நாகேஸ்வரராவ், நடிகை ஜமுனா ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கியதோடு, இயக்குநர் முத்துராமன் மற்றும் நடிகை சச்சு திரையுலகில் செய்த சாதனைகளைப் பற்றியும் பேசினார்கள். மேலும் நாகேஸ்வரராவ், ஜமுனா, சச்சு ஆகிய மூவரும் நடித்த தமிழ், தெலுங்கு படங்களில் இருந்து சில காட்சிகளை எடுத்து 30 நிமிடம் ஓடக்கூடிய குறும்படம் ஒன்றும் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

'நம் உரத்த சிந்தனை' ஹைதராபாத் சிறப்பு மலரை நடிகை சச்சு வெளியிட்டார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துளசி, ஞானப்பிரகாசம், எஸ்.வி.ராஜசேகர், உதயம் ராம் ஆகியோர் செய்திருந்தார்கள்.

Comments