
சென்னை::விஜய் நடிக்கும் படத்தை இயக்குவதில் இருந்து விலகினார் கவுதம் மேனன். இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த படம் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கவிருந்தார். ஹாலிவுட் பாணியிலான இப்படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் வெளிநாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. விஜய் தற்போது முருகதாஸ் இயக்கும் ‘துப்பாக்கி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்ததும் கவுதம் மேனன் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், திடீரென்று இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் விஜய். கடந்த இரண்டு வாரமாக இத்தகவல் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் விஜய் படத்தை இயக்கவில்லை என்று கவுதம் மேனன் அறிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியது: ஆரம்பத்தில் விஜய்யிடம் இப்படத்தின் ஒரு வரி கதையை சொன்னேன். அது அவருக்கு பிடித்திருந்தது. பின்னர் படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டேன். முழுவதுமாக ஸ்கிரிப்ட் தயாரான பிறகு அதை மீண்டும் விஜய்யிடம் கூறினேன். ஆனால், அந்த கதை தனக்கு பொருத்தமாக இருக்காது என்று கூறினார். அவருக்கு ஏற்ற மாதிரி மீண்டும் ஸ்கிரிப்டை மாற்றி அமைக்க எனக்கு நேரமில்லை. எனவே, இப்படத்தை கைவிட முடிவு செய்தோம். அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்ததையடுத்து நான் விலகிவிட்டேன். அடிக்கடி இதுபோல் பிரச்னை வருவது ஏன் என்கிறார்கள். இது தானாக நடக்கும் செயல், அவ்வளவுதான். எதிர்காலத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவேன். இவ்வாறு கவுதம் மேனன் கூறினார்.
Comments
Post a Comment