
சென்னை::விவேக் நாயகனாக நடிக்க இருக்கும் புதிய படம் 'பாலகாட்டு மாதவன்'. இப்படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் கெளரவ தோற்றத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். என்று நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் கேட்டுகொண்டுள்ளார்.
ஏ.பி.சி ட்ரீம்ஸ் எண்டர்டெய்னர்ஸ் சார்பில் குருவண்ண பஷீர், அஜ்மல் அஜீஸ், சந்திரமோஹன் ஆகிய மூன்று பேர் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'செளந்தர்யா'. திகில் படமான இப்படத்தை சந்திரமோஹன் இயக்கியிருக்கிறார். மலையாளப் படம் ஒன்றை இயக்கியிருக்கும் இவருக்கு தமிழில் இதுதான் முதல் படம்.
புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்திற்கு அஜ்மல் அஜீஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 28) சென்னை, பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஏ.பி.சி ட்ரீம்ஸ் எண்டர்டெய்னர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் துவக்க விழாவும் நடைபெற்றது. விவேக் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு 'பாலகாட்டு மாதவன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தையும் சந்திரமோஹன் தான் இயக்குகிறார்.
'செந்தர்யா' இசை குறுந்தகடை வெளியிட்டும், 'பாலகாட்டு மாதவன்' படத்தை துவக்கிவைத்தும் பேசிய கே.பாக்யராஜ், "இந்த இசை வெளியீட்டு விழாவில் இவர்கள் தயாரிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு அறிவிக்கப் போகிறார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால், அந்த படத்தின் தலைப்பு பாலகாட்டு மாதவன் என்பது இப்போதுதான் தெரிந்தது. இந்த தலைப்பை பார்த்தவுடன் எனக்கு எனது பழைய நினைவுகள் வந்துவிட்டது. அந்த ஏழு நாட்களில் நான் ஒரு வசனம் பேசுவேன், "சாரே இந்த லோகத்தில் ஒரு யோக்கியன் இருக்கிறான் என்றால் அது இந்த பாலகாட்டு மாதவன் தான்" என்ற அந்த வசனம் எனக்கு நினைவுக்கு வந்தது. இந்த தலைப்பை பார்த்ததும் எனக்கு மிகவும் சந்தோஷமாகி விட்டது.
இந்த படக்குழுவினருக்கு நான் ஒன்று சொல்லிகொள்கிறேன். இந்த பாலகாட்டு மாதவன் படத்தில் நான் ஒரு காட்சியில் தோன்றுவது போல நடித்தால் நன்றாக இருக்கும். அப்போது தான் அந்த தலைப்புக்கு பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு நாள் அல்லது இரண்டு நாள் படப்பிடிப்பு உள்ளது போல ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்." என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கில்டு தலைவர் கிரிதலால், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் பன்னீர் செல்வம், துணைத் தலைவர் திரிச்சி ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டார்கள், நடிகர் விவேக் வெளியூரில் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வில்லை. அவருடைய வாழ்த்து வீடியோ நிகழ்ச்சியில் ஒளிபரப்பபட்டது.
Comments
Post a Comment