
சென்னை::கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 1981ஆம் ஆண்டு வெளியான 'தில்லு முல்லு' படத்தை ரீமேக் செய்கிறார்கள். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதனும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள்.
1986ஆம் ஆண்டு வெளியான 'மெல்ல திறந்தது கதவு' படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்போது எம்.எஸ்.வி யுடன், இளையராஜவின் இளைய மகனும், இளம் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜ இணைந்து 'தில்லு முல்லு' ரீமேக் படத்திற்கு இசையமைக்கப் போகிறார்.
'அரவாண்', 'சகுனி' உள்ளிட்ட பல படங்களை வெளியிட்டுள்ள 'வேந்தர் மூவிஸ்' தற்போது நேரடியாக படங்களை தயாரிக்க முன்வந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக 'தில்லு முல்லு' படத்தை எஸ்.மதன் ரீமேக் செய்கிறார்.
இதில் ரஜினிகாந்த் வேடத்தில் 'தமிழ்ப் படம்' சிவா நடிக்கிறார். நாயகியாக இஷா தல்வார் நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கும் மலையாளப் படம் 'தட்டத்தின் மறையத்து' படத்தின் நாயகி ஆவார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், கோவை சரளா, டாக்டர் சீனிவாசன், சத்யன், இளவரசு, மனோபாலா, பிரமானந்தம் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
'வீராப்பு', 'தம்பிக்கு இந்த ஊரு' போன்ற படங்களை இயக்கிய பத்ரி இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
இப்படத்தின் தொடக்க விழா வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று சென்னையில் நடைபெறுகிறது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
Comments
Post a Comment