தற்கொலைக்கு முயன்ற நடிகை சுஜிபாலா திருமணம் நிறுத்தம்!!!

Monday,27th of August 2012
நாகர்கோவில்::தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் நடிகை சுஜிபாலா. இதனால் இன்று நடக்க இருந்த அவரது திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அய்யா வழி, கிச்சா வயது 16, முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுஜிபாலா. இப்போது உண்மை என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சுஜிபாலா, குமரி மாவட்டம் எட்டாமடை பகுதியை சேர்ந்தவர். தற்போது நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் வசிக்கிறார். ‘உண்மை' படத்தை இயக்கி நடிக்கும் ரவிக்குமார், சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சுஜிபாலாவின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு சுஜிபாலாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இன்று திருமணம் நடக்க இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு, சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மயக்க நிலையில் இருந்த அவரை நாகர்கோவில் இந்து கல்லூரி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இரு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், சுஜிபாலா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அவர்களது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இன்று காலை போட்டோகிராபர்கள் மருத்துவமனைக்கு வந்தபோது, எனது மகளுக்கு சாதாரண காய்ச்சல்தான் என்று கூறி போட்டோ எடுக்க அவரது தந்தை அனுமதி மறுத்தார். இதற்கிடையே சுஜிபாலாவுக்கும் நடன இயக்குநர் ஒருவருக்கும் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெற்றோர் அவருக்கு ரவிக்குமாருடன் திருமண ஏற்பாடுகள் செய்தனர். திருமணத்தில் விருப்பம் இல்லாததால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று அவருக்கு நடக்க இருந்த திருமணம் தள்ளி வைக்கப்படுவதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

Comments