தமிழில் ஒரு முழு நீள காமெடிப் படத்தைக் கொடுக்கும் திட்டத்தில் கமல்!!!

Friday,31st of August 2012
சென்னை::விஸ்வரூபம் படத்தை முடித்து விட்டு ஹாலிவுட்டுக்குள் காலடி எடுத்து வைக்கப் போகும் கமல்ஹாசன் அதற்கு முன்பாக தமிழில் ஒரு முழு நீள காமெடிப் படத்தைக் கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.

மின்னல் வேகத்தில் இந்தப் படத்தை ஆரம்பித்து எடுத்து முடித்து சட்டுப் புட்டென்று ரிலீஸ் செய்யப் போவதாகவும் கூறுகிறார்கள். இதில் கமலுடன் கை கோர்க்கப் போவது கிரேஸி மோகன்.

வழக்கமாக மிகப் பெரிய படத்தையோ அல்லது சீரியஸ் படத்தையோ நடித்து முடிக்கும்போது அடுத்து ஒரு லைட்டான படத்தைக் கொடுப்பது கமல்ஹாசனின் ஸ்டைல். இதை ஒரு வழக்கமாக கடைப்பிடித்து வரும் கமல்ஹாசன் தற்போது பெரும் பொருட் செலவில் விஸ்வரூபம் என்ற படத்தை முடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் ஹாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார்.

ஹாலிவுட் படத்தை நடிப்பதோடு, இயக்கியும், கதை வசனம் எழுதியும் பணியாற்றப் போகிறார்.

ஆனால் அதற்கு முன்பு ஒரு முழு நீள காமெடிப் படத்தைக் கொடுக்கும் திட்டத்தில் உள்ளாராம் கமல். இப்படத்தின் வசனத்தை கிரேஸி மோகன் எழுதுவார் என்றும் தெரிகிறது. கமல்ஹாசனும், கிரேஸி மோகனும் இணைந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் காமெடிப் படங்கள். அந்த வரிசையில் இந்தப் படத்தையும் இணைக்கும் திட்டம் உள்ளதாம்.

இப்படத்தை படு சடுதியாக எடுத்து முடித்து வெளியிடும் திட்டத்தில் உள்ளாராம் கமல். இந்தப் படத்தை முடித்த பின்னரே அவர் ஹாலிவுட்டுக்குச் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

Comments