சனாகான் மன்னிப்பு கேட்க வேண்டும் - கோபமடைந்த ஸ்ரேயா!!!

Saturday,7th of July 2012
சென்னை::தென்னிந்திய நடிகைகள் தான் அதிகமாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று நடிகை சனாகான் கூறியதற்கு நடிகை ஸ்ரேயாவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய ஸ்ரேயா சனாகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஸ்ரேயா நடிப்பில் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் புதிய படம் 'சந்திரா'. சர்வதேச அளவில் பல விருதுகளை வாங்கியிருக்கும் ரூபா ஐயர் இயக்கும் இப்படம் அரச வம்சத்து கதையாகும். இதில் ஸ்ரேயா கடைசி தலைமுறை ராஜவம்சத்தின் இளவரசியாக நடிக்கிறார்.

இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஸ்ரேயா, நிருபர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, சனாகான் பேசியதை பற்றியும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ரேயா, "அடுத்தவங்க பர்சனல் விஷயத்தைப் பற்றி பேசுவது ரொம்ப தப்பு. சனாகான் அப்படி பேசி இருந்தால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்." என்றவரிடம் மேலும் அதைப் பற்றி நிருபர்கள் கேள்வி கேட்டபோது, "நம்ம இப்போ சந்திரா படத்தின் பிரஸ் மீட்டுக்காக வந்திருக்கோம். மத்தவங்களைப் பற்றி இங்கே ஏன் பேச வேண்டும். ப்ளீஸ் சந்திரா படத்தைப் பற்றி மட்டும் கேளுங்க. என்று அன்பு கட்டளை போட்டார்.

பெரிய பெரிய ஹீரோக்களோடு நடித்து விட்டு இப்படி சின்ன ஹீரோக்களோடு நடிக்கிறீர்களே? என்று கேட்டதற்கு, "சந்திரா படத்தைப் பொறுத்தவரையில் கதை தான் ஹீரோ. ஒரு படத்தின் கதையும், அதில் எனது கேரக்டரும் பிடித்துவிட்டால் போதும். யார் ஹீரோ என்பது பற்றி எனக்கு கவலை இல்லை." என்றார்.

தமிழில் ஏன் இப்போது நீங்கள் நடிக்க வில்லை? என்றதற்கு, "நான் தற்போது தீபா மேத்தா இயக்கும் 'மிட் நைட் சில்ரன்' என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து வருகிறேன். அதனால் தான் மற்ற படங்களில் நடிக்க முடியவில்லை." என்றார்.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் ஹீரோக்களான கணேஷ் வெங்கட்ராமன், பிரேம், நடிகர் விவேக், இயக்குநர் ரூபா ஐயர், படத்தின் தயாரிப்பாளர்கள் ரவிராஜகோபால், பிரசாத், இசையமைப்பாளர் கவுதம் ஸ்ரீவத்சவா ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

Comments