என் வாழ்க்கை சினிமாவில் இருட்டறை ரகசியங்களை அம்பலப்படுத்துவேன்: நடிகை சோனா!!!

Wednesday,27th of June 2012
சென்னை::கவர்ச்சி நடிகை சோனா தனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கிறார். இதற்கான நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையை ‘த டர்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக்கி வெளியிட்டனர். அப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

அதுபோல் சோனா வாழ்க்கையை வைத்து எடுக்கும் படமும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண் வர்க்கத்தால் பல்வேறு வகைகளில் துன்பங்களை சந்தித்ததாக சோனா கூறி வருகிறார்.

சமீபத்தில் நடிகர் எஸ்.பி.பி. சரண் மது விருந்தில் தன்னை கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்தார். இதுபோல் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை இந்த படத்தில் கொண்டு வருகிறார்.

இதுகுறித்து சோனா அளித்த பேட்டி வருமாறு:-

என்னை ரசிகர்கள் கவர்ச்சி நடிகையாகவும் குத்தாட்டம் ஆடுபவராகவும் பார்த்தனர். என்னை பிரச்சினைகளுக்குரியவளாகவும் அறிந்தனர். ஆனால் என் வாழ்க்கையில் உள்ள நிறைய உண்மைகள் மக்களுக்கு தெரியாமலேயே உள்ளது. அனைத்தையும் என் வாழ்க்கையை பற்றி நான் எடுக்கும் சினிமாவில் கொண்டு வருவேன்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையை வைத்து எடுத்த ‘த டர்டி பிக்சர்’ படம் போல் என் படம் இருக்காது. த டர்டி பிக்சர் படம் கோழைத்தனத்தை பிரதிபலித்தது. அதன் நாயகி தற்கொலை செய்து கொள்வார். ஆனால் நான் அப்படி இல்லை துணிச்சலான பெண். எனது திரையுலக அனுபவங்கள், நான் சந்தித்த நபர்கள், என்னை தவறாக பயன்படுத்த முயன்றவர்கள் பற்றியெல்லாம் படத்தில் சொல்வேன். சில இருட்டு ரகசியங்கள் படத்தில் இருக்கும்.

என்னைப் பற்றி பலரும் பலவிதமாக பேசுகிறார்கள். உண்மையில் நான் யார்? என்பதை இப்படம் வெளிப்படுத்தும். இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் கதை இருக்கும். ஆங்கிலத்தில் படத்தை எடுக்கிறேன். வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய காட்சிகள் இடம் பெறும் என்பதால் இங்குள்ள தணிக்கை குழுவிடம் போராட வேண்டியது இருக்கும். ஆங்கிலத்தில் எடுத்தால் இந்த பிரச்சினைகள் ஏற்படாது. எனவே ஆங்கிலத்தில் படத்தை எடுக்கிறேன். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Comments