சினிமாவுக்கு லாயக்கு இல்லாதவர் நடிகை பிராச்சி தேசாய்: இயக்குனர் தாக்கு!!!

Friday, 15th of June 2012
சென்னை::அருண்விஜய் நடித்த 'தடையற தாக்க' படத்தை இயக்கியவர் மகிழ்திருமேனி. இப்படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக இந்தி நடிகை பிராச்சி தேசாயை ஒப்பந்தம் செய்தனர். அவர் திடீரென நடிக்க மறுத்து படப்பிடிப்பில் இருந்து ஓடியதால் மம்தா மோகன்தாஸ் நாயகியானார்.

பிராச்சி தேசாய் ஓடியதால் மன உளைச்சலுக்கு ஆளானதாக இயக்குனர் மகிழ்திருமேனி கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

தடையற தாக்க படத்தில் கதாநாயகியாக நடிக்க பிராச்சி தேசாயை தேர்வு செய்ததும் அவர் வீட்டுக்கு போய் முழு கதையையும் சொன்னேன். அவருக்கு பிடித்தது. முந்தைய படங்கள் வயதுக்கு மீறிய கதைகளாக இருந்தன. இந்த படம் என் வயதுக்கு ஏற்ற கதை. நிச்சயம் நடிப்பேன் என்றார். அட்வான்சும் வாங்கினார்.

சென்னையில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்தன. பிராச்சிதேசாயும் அதில் நடிக்க மும்பையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு வந்தார். இங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்க வைத்தோம். மறுநாள் காலை படப்பிடிப்பை திடீரென ரத்து செய்து விட்டு மும்பை போய்விட்டார். இதனால் அவரது காட்சிகளை படமாக்க முடியவில்லை.

அதன்பிறகு பலமுறை தொடர்பு கொண்டும் நடிக்க வரவில்லை. பிராச்சி தேசாய் சினிமாவுக்கு லாயக்கு இல்லாத நடிகை. என் படங்களுக்கு அவரை இனிமேல் அழைக்க மாட்டேன். 'தடையற தாக்க' படம் நன்றாக ஓடுகிறது. ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.

வினியோகஸ்தர்களும் வசூலில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்து போலீஸ் கதையொன்றை படமாக்க உள்ளேன். இதற்கான நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது.

இவ்வாறு மகிழ்திருமேனி கூறினார்.

Comments