கவுதம் மேனன் மீது ரிச்சா பாய்ச்சல்!!!

Wednesday,13th of June 2012
சென்னை::தன்னிடம் கேட்காமல் படத்தில் நடிப்பதாக கூறியதற்காக கவுதம் மேனனை சாடியுள்ளார் ரிச்சா. மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். தெலுங்கில் சில படங்களில் நடித்தவர், இப்போது வங்க மொழியில் நடித்து வருகிறார். இதற்கிடையே தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தை கவுதம் மேனன் தயாரிக்கிறார். இதில் ஜெய் ஹீரோ. நாடோடிகள் அபிநயா ஹீரோயினாக நடிக்க தேர்வானார். சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். இதையடுத்து இப்படத்தின் இயக்குனர் பிரேம் சாய் தரப்பிலிருந்து ரிச்சாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் ஜெய் ஜோடியாக ரிச்சா நடிக்கிறார். இதன் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நடிப்பார் என டுவிட்டரில் குறிப்பிட்டார் கவுதம் மேனன். இதைப் படித்துவிட்டு, பலரும் போன் செய்து ரிச்சாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனால் ரிச்சா கடுப்பாகிப் போனார். படத்தில் நடிக்க கேட்டது உண்மைதான¢. சம்பளம் உள்பட எந்த விஷயமும் இன்னும் பேசி முடிவாகவில்லை. அதற்குள் நான் இரு மொழியிலும் நடிப்பதாக எப்படி கவுதம் கூறலாம் என கொதித்துப்போனார். குமுறலை வெளிப்படுத்த இருக்கவே இருக்கு டுவிட்டர். உடனே தனது பக்கத்தை திறந்தவர், ஓர் அறிவிப்பை வெளியிடும் முன், சம்பந்தப்பட்டவர்களிடம் அது பற்றி கேட்க வேண்டும் என்பதை சிலர் தெரிந்துகொள்ள வேண்டும். எனது அடுத்த தமிழ் படம் குறித்து எந்த முடிவும் நான் எடுக்கவில்லை என எழுதிவிட்டார். இது பற்றி இயக்குனர் பிரேம் சாயிடம் கேட்டபோது, ரிச்சாவிடம் பேசிவிட்டோம். ஆனால் அவர் நடிப்பது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார் எனறார். ரிச்சா நடிப்பதாக கவுதம் ஏன் அறிவித்தார் என்பது குறித்து பிரேம் சாய் கருத்து கூற மறுத்துவிட்டார்.

Comments