சிம்பு, தனுஷ் மீண்டும் மோதல்: வாலு பட வசனத்தால் பரபரப்பு!!!

Thursday, June, 07, 2012
சிம்பு, தனுஷ் மோதல் மீண்டும் வெடித்துள்ளது. ஏற்கனவே இருவரும் சினிமாவில் ஒருவரையொருவர் தாக்கி வசனம் வைத்தும், ஒருத்தருடன் ஜோடி சேர்ந்த நாயகியை மற்றவர் தன்னுடன் ஜோடி சேர்த்தும் ஆத்திரத்தை கொட்டினர்.

சுள்ளான் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த சிந்து துலானியை ‘மன்மதன்’ படத்தில் சிம்பு துணை நடிகையாக்கி விலைமாது கேரக்டரில் நடிக்க வைத்தார். சிம்புவுடன் காதலை முறித்து பிரிந்த நயன்தாராவை ‘யாரடி நீ மோகினி’ படத்தில் தனுஷ் ஜோடியாக்கினார்.

‘லூசு பெண்ணே‘, ‘எவன்டி உன்ன பெத்தான், கையில கிடைச்சா செத்தான்’ என்பது போல் சிம்பு பாடல்கள் எழுதினார். தனுசும் போட்டியாக ‘ஒய் திஸ் கொலை வெறிடி’ பாடலை எழுதி பாடினார்.

இவ்வாறு அவர்களின் மோதல் நீடித்தது இருவரின் ரசிகர்களும் ஒருவரையொருவர் விமர்சித்து இணையதளங்களில் கருத்துக்கள் வெளியிட்டனர். கடந்த ஒரு மாதமாக இவர்களின் சண்டை சச்சரவு சற்று ஒய்ந்து இருந்தது. இருவரையும் சமரசப்படுத்த மத்தியஸ்தர்கள் முயற்சித்து வந்தனர்.

இந்த நிலையில் வாலு படத்தில் சிம்பு வைத்துள்ள வசனம் மூலம் மீண்டும் தகராறு தலைதூக்கியுள்ளது. இந்த படத்தில் சிம்புவை பார்த்து ஹன்சிகா ஒரு சில பசங்கள பாக்க பாக்கத்தான் பிடிக்கும். ஆனா உன்ன மாதிரி பசங்கள பாத்த உடனே பிடிச்சிடும் என்று பேசுவதுபோல் வசனம் உள்ளது.

தனுஷ் ‘படிக்காதவன்’ படத்தில் தன்னை வெறுக்கும் தமன்னாவிடம் என்ன மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிக்காது. பாக்கப் பாக்கத்தான் பிடிக்கும் என்று வசனம் பேசுவார்.

அந்த வசனத்தை வாலு படத்தில் சேர்த்து, அதோடு தன்னை பார்த்த உடனே பிடிச்சிடும் என்ற வார்த்தைகளை சேர்த்து உள்ளார். இது தனுசுக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிம்புவுடன் திரும்பவும் மல்லுக்கட்ட தயாராகிறார்கள்.

Comments