சான்டல்வுட்டை ஆக்கிரமிக்கும் கேரள ஹீரோயின்கள்!!!

Wednesday, June, 06, 2012
கோலிவுட்டை தொடர்ந்து சான்டல்வுட்டில் (கன்னட திரையுலகம்) மலையாள நடிகைகள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர், பாவனா, இனியா, அனன்யா, பாமா, பத்ம ப்ரியா என கோலிவுட்டில் மலையாள நடிகைகளின் பிரவேசம் அதிகரித்து வந்தது. இவர்களில் அசின், நயன் தாரா, மீரா ஜாஸ்மின் போன்றவர்கள் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். இந்த வரிசையில் கார்த்திகா, ரிமா கல்லிங்கல் என மலையாள ஹீரோயின்கள் பலர் கோலிவுட்டில் அறிமுகமாகிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தடாலடியாக கன்னட படவுலகையும் மலையாள ஹீரோயின்கள் ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளனர். ‘சூப்பர்’ என்ற படம் மூலம் கன்னடத்தில் என்ட்ரி ஆனார் நயன்தாரா.

இப்படம் வெற்றி பெற்றது. புதிய படங்களில் நடிக்க அவரிடம் கன்னட தயாரிப்பாளர்கள் கால்ஷீட் கேட்டு வருகின்றனர். தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதால் அவரால் அதை ஏற்க முடியவில்லை. ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமான பாவனாவுக்கு ஒரு சில படங்களுக்கு பிறகு வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் ‘ஒன்லி விஷ்ணுவர்த்தனா’ படம் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். இதையடுத்து ‘ரோமியோ’, ‘தொப்பிவாலா’, ‘பச்சன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘அழகிய தீயே’ படம் மூலம் தமிழில் அறிமுகமான நவ்யா நாயர் கன்னடத்தில் ‘நம் யஜமானரு’ படம் மூலம் அறிமுகமானார்.

தற்போது ‘பாக்யதா பலேகாரா’, ‘பாஸ்’ ஆகிய கன்னட படங்களில் நடிக்கிறார். இவர்களைத் தொடர்ந்து ‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான பாமா கன்னடத்தில் ‘மொடலாசல’, ‘ஷைலு’ போன்ற படங்களில் நடித்தார். இதையடுத்து ‘அம்பாரா’, ‘குரு’ படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ஏற்கனவே நடித்து முடித்துள்ள ‘ஒன்டு ஷனாதல்லி’, ‘அப்பயா’ விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ‘டிராமா’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கால்ஷீட் இல்லாததால் மறுத்துவிட்டார். அந்த வேடத்தில் தற்போது ராதிகா பண்டிட் நடிக்கிறார். கேரளா நடிகைகளின் திடீர் சான்டல்வுட் ஆக்கிரமிப்பால் திவ்யா ஹரிப்பிரியா உள்ளிட்ட கன்னட நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.

Comments