கவுதம் மேனன் தாமதம் செய்வதால் விஜய் படம் தள்ளிப்போகிறது!

Friday, June, 01, 2012
கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் யோவான் அத்தியாயம் ஒன்று பட ஷூட்டிங் தள்ளிப்போகிறது. இப்பட ஷூட்டிங் கடந்த மாதம் இறுதியிலேயே தொடங்குவதாக இருந்தது. அதன் பின் ஜூன் 2ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது இம்மாதம் இறுதியில் தொடங்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு காரணம், கவுதம் மேனனின் மற்றொரு படம். ஜீவா, சமந்தா நடிப்பில் நீதானே என் பொன்வசந்தம் என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் இப்படம் உருவாகிறது. இப்படத்தை இன்னும் கவுதம் முடிக்கவில்லை.

மூன்று மொழியிலும் இப்படத்தின் 90 சதவீத ஷூட்டிங்கை முடித்துவிட்டு, விஜய் படத்தை அவர் இயக்க திட்டமிட்டார். ஆனால் திட்டமிட்டபடி அவர் 90 சதவீத ஷூட்டிங்கை முடிக்கவில்லையாம். மூன்று மொழியிலும் மூன்று ஹீரோக்கள் நடிப்பதால், அவர்களின் கால்ஷீட் ஒத்துவரும் நேரத்தில் ஒரேடியாக மூன்று மொழி பட ஷூட்டிங்கையும் கவுதம் நடத்தி வருகிறார். இப்போது மூன்று பேரின் கால்ஷீட்டும் கவுதமுக்கு கிடைத்துள்ளது. இதனால் அதை அவர் வீணடிக்க விரும்பவில்லை.

முடிந்த வரை நீதானே என் பொன்வசந்தம் பட ஷூட்டிங்குகளை முடித்துவிட்டு, விஜய் படத்துக்கு தாவலாம் என அவர் கணக்கு போட்டுள்ளார். இதற்கிடையே துப்பாக்கி படத்தில் நடித்து வரும் விஜய், அதில் தனது காட்சிகளை முடிக்கும் நிலையில் உள்ளார். யோவான் படம் தள்ளிப்போனால், ஒரு மாதம் அவர் ஓய்வெடுக்கும் நிலை ஏற்படும்.

Comments