ஹீரோயின்கள் இல்லாத நேரத்தில்... ஆர்யா புலம்பல்!!!

Saturday, 9th of June 2012
ஆர்யா, பிருத்திவிராஜ், பிரபுதேவா, வித்யாபாலன், ஜெனீலியா, தபு என பெரிய நடிகர் பட்டாளத்தின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள உருமி. இந்திய வரலாற்றில் பலருக்கும் தெரியாத உண்மைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று(31.05.12) சென்னையில் நடந்தது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பிருத்திவிராஜ் “ மலையாளத்தில் நான் தயாரித்து வெளியான ’உருமி’ இப்போது தமிழிலும் வெளியாகி வெற்றியடைந்துள்ளது. உருமி படத்தை நான் தயாரிக்கிறேன் எனத் தெரிந்த போது பலர் ‘உங்களுக்கு ஏன் இந்த வேலை.

பரிசோதனை முயற்சிக்குட்பட்ட ஒரு படத்தில் செலவு செய்த பணத்தை எடுக்க முடியாது. இவ்வளவு பொருட்செலவில் இந்த படத்தை எடுக்க வேண்டுமா. உங்கள் சினிமா வாழ்க்கையில் இது உங்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமையப் போகிறது’ எனக் கூறினர்.

அவர்களது வார்த்தைகளை காதில் வாங்காமல் நம்பிக்கையுடன் நான் தயாரித்த உருமி மலையாளத்தில் வெற்றியடைந்தது. உருமியை தமிழில் வெளியிடும் உரிமையை கலைப்புலி எஸ். தாணு வாங்கியதும் அதே நம்பிக்கையில் தான்.

உருமி வெற்றியடைந்ததற்கு படத்தில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்பு மட்டும் காரணம் அல்ல. நடிப்பை தவிர்த்து அவர்கள் அளித்த ஒத்துழைப்பும் காரணம். இந்த படத்தில் நடிக்க அவர்களிடம் கேட்ட போது யாரும் ’யோசித்து பிறகு சொல்கிறேன்’ எனக் கூறவில்லை.

சம்பளத்தையும் உயர்த்திக் கேட்கவில்லை. நான் கொடுப்பதாகக் கூறிய சம்பளத்தையே ஒப்புக் கொண்டு நடித்தனர். படத்தில் ஆர்யா எனக்கு அப்பாவாக நடித்துள்ளார். எனக்கு அப்பாவாக நடிக்க வேண்டும் எனக் கூறிய போது ஆர்யா எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டார்.

முதலில் மலையாளத்தில் வெளியான உருமி இப்போது தமிழில் ’உருமி-பதினைந்தாம் நூற்றாண்டின் உறைவாள்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. அடுத்ததாக தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் வெளியாகிறது” என்று கூறினார்.

பிருத்திவிராஜைத் தொடர்ந்து பேசிய ஆர்யா “ பிருத்திவிராஜுக்கு அப்பாவாக நடிக்க வேண்டியதாக இருந்தாலும் கதையில் அந்த கதாபாத்திரத்திற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து தான் நடித்தேன்.

படத்தில் வித்யாபாலன், ஜெனீலியா, தபு, நித்யாமேனன் என பலர் நடிக்கின்றனர் என்று கூறியதால் படப்பிடிப்பு கலகலப்பாக இருக்கும் என்ற உற்சாகத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன். ஆனால் அங்கு சென்ற பிறகு என்னை மட்டும் வைத்து படம் எடுத்தார்கள்.

கதைப்படி பிருத்திவிராஜ், ஜெனீலியா, வித்யாபாலன் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையில் பிருத்திவிராஜின் அப்பாவாக நான் வருவதால் தனியாக நடிக்கவிட்டுவிட்டார்கள்” என்று புலம்பினார்.

Comments