'பர்பக்ஷன்' என்றால் என்ன... கமல் கிட்ட கத்துக்கலாம்!!!

Saturday, 9th of June 2012
கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஸ்டில்களைப் பார்க்க நேர்ந்தபோது ஒரு ஸ்டில் மட்டும் அப்படியே பார்வையை அங்கேயே நிலைக்க வைத்தது. காரணம், அது கமலா என்ற ஆச்சரியத்தால். அப்படி ஒரு உருமாற்றம் அதில்.

எதைச் செய்தாலும் ஏ டூ இசட் சரியாக செய்ய வேண்டும் என்பதில் கமல் ஆர்வம் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதையேதான் விஸ்வரூபத்திலும் அவர் செய்திருக்கிறார் என்பது படத்தின் ஸ்டில்களைப் பார்க்கும்போதே தெரிகிறது.

ஆன்ட்ரியா ஜெரிமியாவுடன் கதக் ஆடும் கமலைப் பார்க்கும் யாருக்குமே சற்றே ஆச்சரியம் பொங்குவதைத் தடுக்க முடியாது. ஆண்ட்ரியாவை விட கமல்ஹாசன்தான் இதில் அழகாக, நடனத்துக்கே உரிய பெண்மை மிளர காணப்படுகிறார். நடனத்துக்கு முதல் முக்கிய விஷயமே 'அம்சம்', முக பாவனை, பாடி லாங்குவேஜ்தான். அவை அத்தனையும் கமல்ஹாசனிடம் அப்படியே பொருந்திப் போயிருக்கிறது இந்த ஸ்டில்லைப் பார்க்கும்போது. முழுமையான நெளிவு சுளிவுகளுடன், அட்டகாசமான உடல் வளைவுடன், படு க்யூட்டான டான்ஸராக இதில் ஜொலிக்கிறார் கமல்.

இத்தனைக்கும் இப்படத்தில் நடிக்கப் போவதற்கு முன்பு வரை கதக் குறித்து அவருக்கு ஏபிசிடி கூட தெரியாதாம். இந்தப் படத்துக்காகத்தான் கமல் கதக் கற்றுக் கொண்டார். கதக் மேதையான குருஜி பிர்ஹு மஹராஜிடம் மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த நடனத்தைக் கற்றுக் கொண்டு அதை படத்தில் அழகாக பயன்படுத்தியிருக்கிறார். இந்த பிர்ஹு மஹராஜ்தான், தேவதாஸ் படத்தில் மாதுரி தீட்சித்தை கதக் ஆட வைத்து அனைவரையும் மயக்கியவர்.

விஸ்வரூபம் படத்திலும் கமல்ஹாசன் ஆடும் இந்தக் கதக் நடனம் சூப்பர் ஹிட் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நடனக் காட்சியில் பிர்ஹு மஹராஜின் கதக் பள்ளியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் வந்து ஆடி நடனத்திற்கும், பாடலுக்கும் மேலும் உயிர் கொடுத்துள்னராம்.

டான்ஸ் தெரிந்தவர்தானே, எதையாவது ஆடி இதுதான் கதக் என்று கூறி விட்டுப் போகாமல் சில நிமிட பாடல் காட்சி என்றாலும் கூட சிரத்தை எடுத்துக் கொண்டு முழு டான்ஸையும் கற்றுக் கொண்ட கமல் உண்மையிலேயே பெர்பெக்ஷனிஸ்ட் என்பதில் சந்தேகமில்லை.

இந்த டான்ஸ் பிட்டை மட்டுமே வைத்து சலங்கை ஒலி போல தனி படமே எடுக்கலாம் போலிருக்கே....!

Comments