தயாரிப்பாளர் மீது ரேஷ்மி புகார்!!!

Sunday, 17th of June 2012
பெங்களூர்::சம்பள பாக்கியை தரக்கேட்டு தயாரிப்பாளர் மீது புகார் கொடுத்தார் கன்னட நடிகை ரேஷ்மி. ‘துன்யா’ உள்ளிட்ட ஏராளமான கன்னட படங்களில் நடித்திருப்பவர் ரேஷ்மி. கடந்த 3 ஆண்டாக எந்த படங்களிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். சமீபத்தில் ‘சுவராஞ்சலி’ என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இப்படத் தயாரிப்பாளர் பேசியபடி தனக்கு சம்பளம் தரவில்லை என்று நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளார். இதுபற்றி ரேஷ்மி கூறியதாவது:

‘சுவராஞ்சலி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ரூ.4 லட்சம் சம்பளம் தருவதாக தயாரிப்பாளரும், இயக்குனருமான ஸ்ரீனிவாஸ் கூறினார். தற்போது படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. பாக்கி சம்பளத்தை தரும்படி தயாரிப்பாளரிடம் கேட்டபோது, அவர் தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன் பாக்கியை தர மறுக்கிறார். ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை. இதையடுத்து நடிகர் சங்கத்தில் அவர் மீது புகார் கொடுத்துள்ளேன்.

கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தது ஏன் என்று கேட்கிறார்கள். எனது உடல் எடை கூடிவிட்டது. அப்போது சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக இருக்க வேண்டுமென்றால் உடல் எடையை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள். அப்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின்னர் அவர்கள் கூறியதில் உள்ள உண்மையை உணர்ந்தேன். கடுமையான உடற்பயிற்சி, செய்து 15 கிலோ எடை குறைத்தேன். புதிய ரேஷ்மியை ரசிகர்கள் இனி பார்ப்பார்கள். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இவ்வாறு ரேஷ்மி கூறினார்.

Comments