
சென்னை::கார்த்தி, பிரணிதா நடித்துள்ள படம் ‘சகுனி’. சமீபத்தில் வெளியானது. இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அப்போது கார்த்தி பேசியதாவது: ‘சகுனி’ அரசியல் பற்றிய ஸ்கிரிப்ட். ஆனாலும் அதை வன்முறைக்கு இடமில்லாமல் ஆரம்பம் முதல் கடைசி வரை சந்தோஷமாக, கலகலப்பாக சொல்ல வேண்டும். தூள் மாதிரியோ அல்லது மற்ற அரசியல் கதைகள் மாதிரியோ இருக்கக்கூடாது என்று முதலிலேயே இயக்குனர் சங்கர் தயாளுடன் பேசி முடிவு செய்யப்பட்டது. எனவேதான் இப்படத்தை காமெடி கலந்து ரொம்பவும் லேசாக டீல் செய்திருந்தோம்.
குழந்தைகள், பெண்கள் எல்லோரும் பார்க்கும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. முதலில் இப்படத்தில் வில்லன் வேடத்தில் வேறு நடிகர் நடித்தார். பின்னர் அந்த காட்சிகள் மீண்டும் பிரகாஷ்ராஜ் நடிக்க ரீ ஷூட் செய்யப்பட்டது. நல்ல முறையில் கதையை சொல்ல வேண்டும் என்பதற்காக எக்ஸ்ட்ரா செலவு பற்றியும் கவலைப்படவில்லை. ரஜினி, கமல், ஸ்ரீதேவி என்று படத்தின் கேரக்டர்களுக்கு சூட்டப்பட்ட பெயர்கள் பெரிய வரவேற்பை பெற்றுதந்தது. நீண்ட வருடத்துக்கு பிறகு ராதிகா நடித்தார். பீடி சாமியாராக நாசர் நடித்துள்ளார்.
இங்கு வாழ்த்தி பேசிய சிலர் நான் அரசியலுக்கு வருவதற்கு அடித்தளம் போட்டதாக கூறுகிறார்கள். அரசியல்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன். இவ்வாறு கார்த்தி பேசினார்.
Comments
Post a Comment