தடையறத் தாக்க:-விமர்சனம்!!!

Friday, 15th of June 2012
சென்னை::வேலை, காதல் என யாவும் நலமாக செட்டில் ஆகவிருக்கும் ஒருவன் வாழ்க்கையைத் திடீரெனக் குலைத்துப் போடும் தாதாயிஸத்தை... தடையறத் தாக்க!

டிராவல்ஸ் வேலையில் வெற்றிக் கொடி, மம்தாவுடனான காதலில் குடும்பத்தின் பச்சைக் கொடித் தருணத்தில் தோழிக்கு உதவுகிறார் அருண் விஜய். அது நகரத்தையே கதிகலங்கவைக்கும் தாதா மகாவுடன் மோதும் சூழ்நிலையை உண்டாக்க, தனி ஆளாக அருண் விஜய் எல்லாத் தடைகளையும் எப்படி உடைத்தார் என்பதே இரண்டரை மணி நேர க்ரைம் த்ரில்லர்!

'அட! இப்படி எத்தனை தாதா கதை பார்த்திருப்போம்’ என்று கடந்து செல்ல முடியாதபடி, ஆரம்பம் முதல் இறுதி வரை பரபர... தடதட... திகுதிகு திரைக்கதை அமைத்து சேஸ் ரேஸ் நடத்தியிருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனிக்கு ஹாட்ஸ் ஆஃப்! ரௌடி சகோதரர்களின் ஃப்ளாஷ் பேக், மகாவின் மர்ம 'தொடுப்பு’, சுளீர் சித்ரவதைக் கூடம், ஜிலீர் காதல், கிறுகிறு சேஸிங், அருண் விஜய் அடிக்கும் எஸ்.எம்.எஸ். அப்படியே ஸ்க்ரீனில் வருவது போன்ற பளிச் ஐடியா, சஸ்பென்ஸ் க்ளைமாக்ஸ் என அடுக்கடுக்காகப் படத்தில் பல ஆச்சர்யங்கள்!

ஐந்தாம் வகுப்பு வரையே படித்த, 'ஸாரி’க்குக்கூட ஸ்பெல்லிங் தெரியாத, காதலியிடம்கூட கட் அண்ட் ரைட் ஹீரோவாக அருண் விஜய் செம ஸ்மார்ட். தமிழ் சினிமாவில் உங்கள் கணக்கு துவங்குகிறது அருண்... வாழ்த்துகள்! மகா முன்னிலையிலேயே அருள்தாஸ் தன்னைச் சீண்டும்போது, ஈட்டி சொருகியதுபோல முறைக்கும் அந்த ஷார்ப் லுக்... அருண் விஜயின் மேன்லி மேனரிஸமே படத்தைத் தூணாகத் தாங்கி நிற்கிறது!

'அம்மா வர பதினஞ்சு நிமிஷம் ஆகும். அதுக்குள்ள உனக்கு என்ன வேணுமோ பண்ணிக்கோ... எனக்கு எதுவும் வேணாம்... ரேப்கூடப் பண்ணிக்கோ’ என்று அருண் விஜயின் மடியில் 'கெத்து’ காட்டுவதும் 'இன்னைக்கு என்ன கலர் பட்டர்ஃப்ளை’ என்றதும் வெட்கிச் சிவப்பதுமாக... மம்தா... செம க்யூட்!

'ஸாரிக்கு ஸ்பெல்லிங் சொல்லு’...

'ஸாரி மச்சான் தெரியலை!’,

'நீயே சொல்லு... லட்டு என்ன நல்லாவா இருந்துச்சு!’ என்று ஆக்ஷன் கதையில், அதன் போக்கிலேயே காமெடி சேர்த்திருப்பது கலகல ரிலாக்ஸ்.

பாடல்களுக்கு மென்மெலடி வாசித்த தமன் பின்னணி இசையில் மிரட்டல் திகில் சேர்த்திருக்கிறார். இரவு நேரத்தில் பங்களா, ரயில் பாலம், தெரு விளக்குக்குக் கீழே நிற்கும் ஆட்டோ, மழை இரவு, கார் பயணம் என அனைத்துக் காட்சிகளுக்குள்ளும் நம்மை அழைத்துச் சென்று அமரவைக்கிறது சுகுமாரின் ஒளிப்பதிவு. சடார் தடாரெனத் தடம் மாறும் கதையைக் குழப்பம் இல்லாமல் ரசிக்க பிரவீன் மற்றும் ஸ்ரீகாந்தின் எடிட்டிங் பக்க பலம்!

ஆக்ஷன் கதைதான்... மிரட்டல் ரௌடிகள் தான். ஆனால், அவர்கள் என்ன நினைத்தாலும் சாதிக்கிறார்களே... ஒட்டுமொத்தக் காவல் துறையுமா இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது? அதுவரை வம்பு தும்புக்குப் போகாத அருண் விஜய், அருவாளோடு அத்தனை ரௌடிகளை வெட்டி வீழ்த்துவதும், பேக்கிங் பிரிக்காத அம்மாம் பெரிய இயந்திரத்தைச் சில மணி நேரங்களில் பயன்படுத்தித் தடயம் மறைப்பதும்... 'லாஜிக்’கறத் தாக்க!

ஆனாலும், இது எதையும் யோசிக்கவிடாமல் ஜெட் வேகப் பயணத்தில் தடைகளைத் தகர்த்து ஈர்க்கிறது படம்!

Comments