எம்ஜிஆர் - சிவாஜியை சுமக்க வைத்த கமல், இன்னும் பல காலம் கதாநாயகிகளைச் சுமக்கட்டும்! - வைரமுத்து!

Tuesday, June,05, 2012
எம்.ஜி.ஆர், சிவாஜி இரண்டு பேரும் சிறு வயது கமல்ஹாசனை தூக்கி சுமந்திருக்கிறார்கள். அவர்களை சுமக்க வைத்த பாவம் கமல்ஹாசனை சும்மா விடுமா? அதனால்தான் இப்போது அவர் கதாநாயகிகளைத் தூக்கிச் சுமக்கிறார். இன்னும் பல காலம் இதை அவர் செய்து கொண்டே இருக்கட்டும், என கவிஞர் வைரமுத்து கூறினார்.

மறைந்த கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன், 'பொன்மாலைப் பொழுது' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

பாடல்களை, நடிகர் கமல்ஹாசன் வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். விழாவில், கமல்ஹாசன் பேசுகையில், "இந்த விழாவில் கலந்து கொள்வது கடன், கடமை என்று வைரமுத்து பேசும்போது சொன்னார். எனக்கும் அந்த கடனும் இருக்கிறது. கடமையும் இருக்கிறது.

படத்தின் கதாநாயகனின் தந்தை கலைவாணன் கண்ணதாசன் இப்போது உயிருடன் இருந்திருந்தால், இந்த படத்தின் தயாரிப்பாளராக அல்லது கவிஞராக அவருடைய பங்கு இருந்திருக்கும்.

கலைவாணன், நகைச்சுவை உணர்வு உள்ளவர். அவரைப்போல் அவருடைய மகன் ஆதவ் கண்ணதாசனும் நகைச்சுவை உணர்வு உடையவராக இருக்கிறார். கண்ணதாசனை நான் தொட்டுப்பார்த்து இருக்கிறேன். அதேபோல் பெரியாரின் கால்களைத் தொட்டுப்பார்த்து இருக்கிறேன்.

நடிகர்களுக்கு, ரசிகர்களின் கைத்தட்டல்தான் பெரிய பலம். அது ரசிகர்களுக்கே தெரியாது. எங்களுக்குத்தான் தெரியும். எங்களுக்கு கொடுத்த கைத்தட்டலை இந்த படத்தின் கதாநாயகன் ஆதவ் கண்ணதாசனுக்கும் கொடுக்க வேண்டும்,'' என்றார்.

வைரமுத்து

விழாவில், கவிஞர் வைரமுத்து பேசுகையில், "எனக்கு கமல்ஹாசன் மீது ஒரு செல்லப் பொறாமை உண்டு. நான் பார்த்து வியந்த எம்.ஜி.ஆர், சிவாஜி இரண்டு சிகரங்களும் சிறு வயது கமல்ஹாசனை தூக்கிச் சுமந்திருக்கிறார்கள். அவர்களை சுமக்க வைத்த 'பாவம்' கமல்ஹாசனை சும்மா விடுமா?

எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் சுமக்க வைத்தவரே, எதிர்காலத்தில் நீ கதாநாயகிகளை தூக்கி சுமக்கக் கடவது என்று காலம் அவரை சந்தோஷமாக சபித்திருக்கிறது. நானும் அந்த சந்தோஷ சாபத்தை வழிமொழிகிறேன்,'' என்று கூற, கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

விழாவில் இயக்குநர்கள் சரவணன், ஜி.என்.ஆர்.குமரவேல், பாண்டிராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் சாந்தனு, விஷ்ணு, பிருத்வி பாண்டியராஜன், கிஷோர், ஆதவ் கண்ணதாசன், நடிகை காயத்ரி, பாடல் ஆசிரியர்கள் மதன் கார்க்கி, கார்த்திக் மேத்தா, இசையமைப்பாளர் சத்யா ஆகியோரும் பேசினார்கள்.

பட அதிபர் அமிர்தா கவுரி வரவேற்று பேசினார். இயக்குநர் ஏ.சி.துரை நன்றி கூறினார்.

Comments