சகுனி - சினிமா விமர்சனம்!!!!

Sunday, 24th of June 2012
சென்னை::காமெடி, பைட், செண்டிமென்ட் என்று அனைத்தையும் சேர்த்து ஒரு கமர்ஷியல் எண்டர்டெயின்மென்ட் படத்தை கொடுப்பதில் கார்த்தி கெட்டிக்காரர். இவருடைய தொடர் வெற்றிக்கு இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும், கதைகளமும் ஒரு காரணம். அப்படி ஒரு ஃபவர்புல்லான கதாபாத்திரமாகவும்,வித்தியாசமான கதைக்களமாகவும் கார்த்தி தேர்ந்தெடுத்திருக்கும் மற்றொரு படம் 'சகுனி'.

காரைக்குடியில் உள்ள கார்த்தியின் பூர்விக பங்களா வீட்டுக்கு அருகே ஒரு பாலத்தைக் கட்ட ரயில்வே துறை முடிவு செய்கிறது. இதனால் கார்த்தியின் வீடு பறிபோகும் நிலை ஏற்பட, தனது வீட்டை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சரைப் பார்க்க சென்னைக்கு வருகிறார் கார்த்தி. சென்னைக்கு வந்தவருக்கு எந்த அமைச்சரையும் பார்க்க முடியாமல் ஏமாற்றமே கிடைக்கிறது. நொந்துப்போகும் கார்த்தி, ஒரு கட்டத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் ரவுடி பெண்ணான ராதிகாவை சந்திக்கிறார். அந்த இடத்தில் கார்த்தியின் சகுனி மூலை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. ரவுடி ராதிகாவை கவுன்சிலராக்கி, பிறகு மேயர் ஆக்குகிறார். பீடி சாமியாராக தெருவில் இருந்த நாசரை பெரிய சாமியாராக்கி கோடிகளை சம்பாதிக்க வைக்கிறார்.

கார்த்தியின் இந்த வளர்ச்சியைப் பார்த்து மிரண்டு போகும் முதலமைச்சரான பிரகாஷ்ராஜ், கார்த்தி மீது கஞ்சா வழக்கைப் போட்டு சிறையில் அடைக்கிறார். இதன் மூலம் சிறையில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவரான கோட்டா சீனிவாசனை சந்திக்கும் கார்த்தி, அவரை முதலமைச்சராக்க முயற்சிகள் செய்கிறார். இதனை தடுக்க நினைக்கும் பிரகாஷ்ராஜ், அவர் பங்குக்கு சில சதிதிட்டங்களை செய்ய, இறுதியில் அவற்றை கார்த்தி எப்படி முறியடித்து கோட்டா சீனிவாசனை முதலமைச்சராக்கி தனது வீட்டை காப்பாற்றுகிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ரொம்ப சாதரணமான கதைக்கரு என்றாலும், அதற்கு இயக்குநர் திரைக்கதை அமைத்திருக்கும் விதமும், அரசியல் சம்மந்தமான பகுதியை காட்டியிருக்கும் விதமும் அருமை.

குறுகிய காலத்திலேயே பெரிய பெரிய கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி பெறும் கார்த்தி, இந்தப் படத்திலும் அப்படியொரு ஃபவர்புல்லான கதாபாத்த்திரத்தில் நடித்திருக்கிறார். ரொம்ப வெய்ட்டான கேரக்டராக இருந்தாலும், அதை தனது லைட்டான நடிப்பின் மூலம் கார்த்தி அசத்தியிருக்கிறார். கார்த்தியின் எதார்த்தமான நடிப்பு இந்த படத்திலும் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. அதிலும் விதவிதமான ஹேர் ஸ்டைல், நடனத்தில் புது புது ஸ்டெப்புகள் என்று தனது ரசிகர்களை உட்சாகப்படுத்துகிறார்.

பிரகாஷ்ராஜை வில்லனாக ஏற்றுகொள்ள முடிந்த அளவுக்கு முதலமைச்சராக ஏற்றுகொள்ள முடியவில்லை. தனக்கு கொடுக்கப்பட்டது வில்லன் கதாபாத்திரம் என்பதை உணர்ந்து நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், அப்படியே தான் ஒரு முதலமைச்சர் என்பதையும் உணர்ந்து நடித்திருக்கலாம். செல்லம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் நடித்தாரே! அதற்காகவே பிரகாஷ்ராஜை நாம் பாராட்டியாக வேண்டும்.

ஹீரோயின் பிரணிதா, வென்னையில் செய்த சிலைப் போல பளபளக்கிறார். மூன்று டூயட் பாடல், சில காதல் காட்சி என்று தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

கார் ஸ்டார்ட்டிங் ட்ரபுள் சிரிப்பிற்காகவே கோட்டா சீனிவாசனை ரசிக்கலாம். அதிலும் அவர் காட்டும் சிறு சிறு முகபாவனைகள் அவருகே உரிய சிறப்பு. சாமியாராக வரும் நாசர் தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.

ஒரு படம் வசூல் ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்றால் அதில் சந்தானம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதை இந்தப் படமும் நிருபித்திருக்கிறது. படத்தின் முதல் பாதி சந்தானத்தின் நக்கல் நகைச்சுவையை வைத்தே நகர்த்தப்படுகிறது.

ரோஜா, அனுஷ்கா, ஆண்ட்ரியா என பெரிய பெரிய நட்சத்திரங்களை கெஸ்ட் ரோலாக்கி தனது திறமையை காண்பித்திருக்கிறார் இயக்குநர்.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் "வெள்ளை பம்பரம்..." பாடல் சுமார். "போட்டது பத்தல்ல..." பாடல் குடிகாரர்களின் பிரச்சாரப் பாடலாக இருக்கும். பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு ஓகே.

கார்த்தி, சந்தானம் காமெடிக்கு ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு இருப்பதாலே படத்தின் முதல் பாதியை இவர்களை வைத்தே நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் சங்கர் தயாள். ஆரம்பத்தில் அமர்க்களமான தொடக்கமாக இருந்தாலும், போக போக தலையை சொறியவைத்து விடுகிறார்கள். இரண்டாம் பாதியில் விறுவிறுப்படையும் படம் ஜெட் வேகத்தில் பயணித்தாலும், அழுத்தம் இல்லாத காட்சிகளால் சில இடங்களில் சலிப்பு ஏற்பட வைக்கிறது. குறிப்பாக கிரண் வரும் காரில் வரும்போது வெடிகுண்டு வெடிக்கும் காட்சி முதல் முறை காட்டும்பொழுது கார் ரன்னிங்கில் இருக்கிறது. அதே காட்சியை மற்றொரு முறை காண்பிக்கும்போது அந்த கார் நின்றுகொண்டு இருக்கிறது.

இதுபோன்ற லாஜிக் இல்லாத சில காட்சிகளிலும், சம்மந்தமில்லாத இடத்தில் இடம்பெறும் பாடலிலும் கத்திரியைப் போட்டு இருந்தால் 'சகுனி' கார்த்தியின் கேரியரில் வசூலை வாரிகுவித்த சாதனைப் படமாக அமைந்திருக்கும்.

கார்த்தியின் எதார்த்தமான நடிப்பு, சந்தானத்தின் காமெடி போன்ற அம்சங்களுக்காக 'சகுனி' யை ஒரு முறைப் பார்க்கலாம்...





நடிப்பு: கார்த்தி, சந்தானம், ப்ரணிதா, பிரகாஷ் ராஜ், ராதிகா, கிரண், கோட்டா சீனிவாசராவ், மனோபாலா, நாசர்

இசை; ஜீவி பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: பிஜி முத்தையா

பிஆர்ஓ; ஜான்சன்

தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

இயக்கம்: சங்கர் தயாள்,

Comments