ரசிகர்கள் என்னையும் மனசுல வச்சு கொண்டாணும் : ப்ரணீதா ஆசை...!!!

Wednesday, June, 06, 2012
உதயன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ப்ரணீதா, தன்னுடைய அடுத்த படத்திலேயே கார்த்தியுடன் ஜோடி போட்டுள்ளார். புதுமுகம் ஷங்கர் தயாளன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் சகுனி தான் அந்தப்படம். கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் இளைஞன் ஒருவன் எப்படி அரசியல் கும்பலில் மாட்டிக்கொண்டு, அதிலிருந்து எப்படி மீண்டு வெளிவருகிறான் என்பதை ரொம்பவே சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் டைரக்டர். சில தினங்களுக்கு முன்னர் இப்படத்த‌ின் ஆடியோ ரிலீஸீம், அதனைத்தொடர்ந்து பிரஸ் மீட் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பங்கேற்ற பின்னர் நடிகை ப்ரணீதா தினமலருக்கு அளித்த பேட்டி இதோ...

* சினிமாவில் உங்கள் அறிமுகம்?

என் சொந்த ஊர் பெங்களூரு. அப்பா-அம்மா ரெண்டு பேருமே டாக்டர். நான் இப்போது பி.‌ஏ. எகனாமிக்ஸ் படிக்கிறேன். சினிமாவில் எனக்கு ஆர்வம் இருந்ததால் நடிப்புக்கு வந்துவிட்டேன். கன்னடத்தில் வெளியான போக்கிரி ரீ-மேக்கில் தான் முதன்முதலில் அறிமுகமானேன்.

* பெரிய நடிகர்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று சமீபத்தில் செய்தி வந்தது. அதைப்பற்றி உங்கள் கருத்து?

நான் குறிப்பிட்டு எந்த நடிகருடனும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது கிடையாது. ஆனால் என்னைப்பற்றி தவறான செய்திகளை பரப்புகின்றனர். நல்ல கதை இருந்தால் எல்லா நடிகர்களுடன் நடிப்பேன்.

* சினிமாவில் யாருடைய ஸ்டைலை பின்பற்றுகிறீர்கள்?

நான் யாருடைய ஸ்டைலேயும் பின் பற்றுவது கிடையாது. ப்ரணீதா, ப்ரணீதாவாகவே இருக்க விரும்புகிறேன்.

* தெலுங்கு பட அனுபவம் பற்றி...?

‌‌தெலு‌‌ங்கில் இப்ப நான் இரண்டு படம் நடிச்சுகிட்டு இருக்கேன். ஏற்கனவே நான் சித்தார்த்துடன் நடித்த பாவா படம் சூப்பராக ஓடியது. சகுனி படத்தை கூட தெலுங்கிலும் வெளியிடப்போறதா சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

* கார்த்திக்குடன் நடிச்ச அனுபவம் பற்றி சொல்லுங்க?

கார்த்தி பற்றி சொல்லனும்னா ரொம்ப நல்ல நடிகர், காட்சிக்கு எது தேவையோ அது வரலேனா சொல்லி கொடுப்பார். அவருக்குள் நல்ல நகைச்சுவை சென்ஸ் இருக்கு. ரொம்ப ஜாலியான ஆளு கார்த்தி.

* சகுனி படத்தில் உங்களுடைய ரோல்...?

சகுனி படத்தில் நடித்தது ரொம்ப நல்ல அனுபவம் இருக்கு. படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளேன். எனக்கு அம்மாவா ரோஜா நடிச்சுருக்காங்க. அப்புறம் சந்தானம், பிரகாஷ்ராஜ் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து இருக்காங்க. ஒரு பெரிய டீமுடன் வேலை பார்த்தது மூலம் நிறைய விஷயங்களை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடிந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னால் தாமதம் ஏற்பட்டதே கிடையாது. என் அப்பா-அம்மா அவர்கள் வேலைகளில் பிஸியாக இருப்பதால் ‌ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் தனியா தான் போறேன், தனியா தான் வர்றேன். எனக்கு எந்த டென்ஷனும் கிடையாது.

* ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது...?

ரசிகர்கள் என் படத்தை பார்த்து, என்னையும் அவங்க மனசுல வச்சு கொண்டாடனும்னு ஆசைப்படுகிறேன். சகுனி படம் எனக்கு நிறைய ரசிகர்களை பெற்று தரும் என்று நம்புகிறேன். தமிழ் மொழியை நல்லா பேசணும், தமிழில் நல்லா நடிக்கணும், நிறைய நல்ல நல்ல படங்கள் பண்ண வேண்டும் என ஆசைப்படுக‌ிறேன் என்று கூறிய ப்ரணீதா அப்படியே தினமலர் வாசகர்களுக்கு என் வாழ்த்துக்களை மறக்காம சொல்லிடுங்க என்றார்.

Comments