
சென்னை:முகமூடி' படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது, நடிகர் ஜீவாவுக்கு கழுத்தில் பலத்த அடிபட்டது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, ஜீவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிஷ்கின் இயக்க, யுடிவி தயாரிக்கும் புதிய படம் முகமூடி. சூப்பர் மேன் வகை கதை இது. முழுக்க முழுக்க ஆக்ஷன் சாகஸக் காட்சிகள் நிறைந்தது.
சண்டை காட்சிகளை படமாக்குவதற்காக ஹாங்காங்கில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டர் டோனி நூம் தலைமையில் 5 ஸ்டண்ட் வீரர்கள் சென்னை வந்தார்கள்.
சென்னை சாந்தோமில் உள்ள ஒரு பள்ளியில், கடந்த 30 நாட்களாக தினமும் இரவில், 'முகமூடி' படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் இரவில் தொடங்கிய படப்பிடிப்பு நேற்று அதிகாலை வரை நடந்தது.
வில்லனாக நடிக்கும் நரேன் மற்றும் அவருடைய கோஷ்டியுடன் ஜீவா மோதும் குங்பூ சண்டை காட்சி படமாகிக் கொண்டிருந்தது. அதிகாலையில் படப்பிடிப்பு முடிவடையப்போகும் நேரத்தில், ஜீவா கழுத்தில் பலத்த அடிபட்டது. ஒரு ஸ்டண்ட் நடிகர் தனது காலினால் ஜீவாவை ஓங்கி உதைப்பது போன்ற காட்சியில், தவறுதலாக நிஜமாகவே ஜீவா கழுத்தில் உதைத்துவிட்டார். இதனால் கழுத்து திருப்பிக் கொண்டது.
வலியினால் துடித்த ஜீவா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
ஜீவாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். உள்காயம் அதிகமிருப்பதால், அவரை ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
Comments
Post a Comment