மண்ணின் இசையை விண்ணுக்கு உயர்த்திவர் இளையராஜா! - இறையன்பு!!!

Tuesday, June,05, 2012
தெரு இசையை நாட்டுக்கும், மண்ணிலுள்ள இசையை விண்ணுக்கும் அழைத்துச் சென்றதுடன், இசையால் திரைபடத்தை பார்க்க வைக்கும் மரபை ஏற்படுத்தியவர் இசைஞானி இளையராஜா, என்று தமிழ்நாடு அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் பாராட்டினார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் பிறந்த நாள் விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. விழாவில் "பால் நிலாப் பாதை" என்ற நூலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட இறையன்பு பெற்றுக் கொண்டார்.

"எனக்கு எதுவோ உனக்கும் அதுவே " என்ற நூலை கவிஞர் மு.மேத்தா வெளியிட கவிஞர் முத்துலிங்கம் பெற்றுக் கொண்டார். தொடந்து பிறந்த நாள் கேக்கை இளையராஜா வெட்டி நடிகர் கமல்ஹாசனுக்கு ஊட்டினார்.

மேற்கத்திய இசையை எளிமைப்படுத்தியவர்...

விழாவில் தமிழ்நாடு இறையன்பு பேசுகையில், "பாமரர்களுக்கும் புரியும் வகையில் மேற்கத்திய இசையையும் தன்னுடைய பாடல்கள் மூலம் இளையராஜா எளிமையாக வழங்கினார். அத்துடன் தெரு இசையை நாட்டுக்கும், மண்ணிலுள்ள இசையை விண்ணுக்கும் அழைத்தும் சென்றதுடன், இசையால் திரைபடத்தை பார்க்க வைக்கும் மரபை ஏற்படுத்தினார்.

ஓவியம், நடனம், சிற்பம் மற்றும் தியானத்திலும் இசை உள்ளது. உலகில் ஏதாவது மாற்றத்தை கொண்டு வருவதாக இருந்தால் அது இசையால் மட்டுமே முடியும்.

பறவைகள் தங்களுடைய சந்தோஷத்திற்காக பாடுகின்றன, ஆனால் மனிதன் பிறருடைய சந்தோஷத்துக்காக பாடுகிறான். இந்த பணியை செய்து வரும் இளையராஜாவை பாராட்டுவதில் பெருமை அடைகிறேன்," என்றார்.

விழாவில் இளையராஜாவின் பாடல்கள் அடங்கிய இன்னிசைக் கச்சேரி நடந்தது.

Comments