சூர்யா-கார்த்தி இரண்டு பேரில் யார் எம்.ஜி.ஆர், யார் சிவாஜி?''!!!

Sunday, 3rd of June 2012
சூர்யா-கார்த்தி ஆகிய இரண்டு பேரில் யார் எம்.ஜி.ஆர், யார் சிவாஜி?'' என்று `சகுனி' படவிழாவில் ருசிகர விவாதம் நடந்தது.

பாடல் வெளியீடு

கார்த்தி-பிரணிதா ஜோடியாக நடித்து, சங்கர்தயாள் டைரக்ஷனில், எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம், `சகுனி.' இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை டைரக்டர் லிங்குசாமி வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்.

விழாவில், டைரக்டர்-நடிகர் பார்த்திபன் பேசியதாவது:-

``சகுனி, சோழியை உருட்டி சூழ்ச்சி செய்தவன் மட்டுமல்ல. நூறு பேர் சாப்பாட்டை ஒருவனே சாப்பிட்டு, துரியோதனனை பழிவாங்கிய ஹீரோ. மகாபாரதம் வெற்றி பெற்றதற்கு காரணமே சகுனிதான்.

பெரிய ஸ்டார்

சிவகுமார் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ``பெரிய ஸ்டார் ஆவது சுலபம். ஒழுக்கமான ஸ்டார் ஆவதுதான் பெரிய விஷயம்'' என்று கூறியிருந்தார். ராமாயணத்தை சிவகுமார் சொல்ல சொல்ல வால்மீகி எழுதியிருப்பாரோ என்று கருதுகிற அளவுக்கு, அவ்வளவு சுவையாக ராமாயண கதையை சொல்கிறார், சிவகுமார்.

சூர்யா உயரம் எவ்வளவு? என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே போகிறார். கார்த்தி படங்கள் பெரிய அளவில் வியாபாரம் ஆகின்றன.''

இவ்வாறு பார்த்திபன் பேசினார்.

யார் எம்.ஜி.ஆர்-யார் சிவாஜி?

நடிகர்-டைரக்டர் மனோபாலா பேசும்போது, ``சிவகுமார் எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் இரண்டு பிள்ளைகளாக பெற்று இருக்கிறார். அதில் யார் எம்.ஜி.ஆர், யார் சிவாஜி? என்று நீங்களே (ரசிகர்கள்) கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்'' என்றார்.

அதைக் கேட்டு அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள்.

ஜி.வி.பிரகாஷ்

விழாவில் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், விஜய் அன்டனி, டைரக்டர்கள் வெங்கட்பிரபு, ராஜேஷ், பாண்டிராஜ், சுசீந்திரன், சுராஜ், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் டி.சிவா, யு.டி.வி.தனஞ்செயன், பாடல் ஆசிரியர்கள் விவேகா, அண்ணாமலை மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

Comments