தென்னிந்திய படங்கள் ரூ.650 கோடி வசூல்!!!

Saturday, 9th of June 2012
ஒரு காலத்தில் இந்தி பாடல்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய ரசிகர்களை ஆட்டிப்படைத்தது. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் வரவுக்கு பிறகு அது தவிடுபொடியானது. தற்போது இந்தி படவுலகை தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்கள் ஆக்ரமித்துள்ளது. சமீபகாலத்தில் ரீமேக் ஆன தென்னிந்திய படங்கள் ரூ.650 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. தெலுங்கில் வெளியான ‘விக்ரமர்குடு’ என்ற படம் தமிழில் ‘சிறுத்தை’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. கார்த்தி ஹீரோ. இப்படத்தை பிரபு தேவா இந்தியில் ‘ரவுடி ரத்தோர்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இது வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

முதல் வாரத்திலேயே ரூ.50 கோடி வசூல் ஈட்டி உள்ளது. விஜய்யின் போக்கிரி, பாடிகாட், சூர்யா நடித்த கஜினி, சிங்கம் மற்றும் ரெடி, ஹவுஸ்புல் 2 ஆகிய படங்கள் தலா ரூ.100 கோடியை தாண்டி வசூல் அள்ளியது. ஒட்டுமொத்தமாக ரூ.650 கோடி வசூல் சாதனை படைத்தது. இதன்மூலம் தென்னிந்திய இயக்குனர்கள் ரசிகர்களை எப்படி தியேட்டருக்குள் இழுத்து வரவேண்டும் என்று பார்முலாவை பாலிவுட்டில் பதித்திருக்கிறார்கள்.

சில பாலிவுட் இயக்குனர்கள் இதை ஜீரணிக்க முடியாமல் எதிர்கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி இந்தியில் வெளியானது. அந்த டிரெண்ட்தான் இப்போதும் நடக்கிறது. எனவேதான் சவுத் ரீமேக் படங்கள் வெற்றி பெறுகின்றன’ என்கின்றனர். ஆனால் ஜிதேந்திரா, ஸ்ரீதேவி காலத்திலேயே ரீமேக் பாணி இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது. கே.ராகவேந்திர ராவ் இயக்கிய ‘ஊகரி மொனகாடு’ என்ற தெலுங்கு படம் அப்போதே இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

‘தென்னிந்திய படங்களின் வெற்றிக்கு காரணம் படத்தின் கதை அனைத்து மொழிகளுக்கும் பொருத்தமாக அமைவதும், தரமான உருவாக்கமும்தான்’ என்று ஏ.ஆர்.முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார். தற்போது அனுஷ்கா நடித்த ‘அருந்ததி’ மற்றும் ‘பிஸ்னஸ்மேன்’, ‘டூகுடு’, ‘மகதீரா’, ‘மங்காத்தா’, ‘காஞ்சனா’, ‘சாமி’ ஆகிய படங்கள் இந்தியில் ரீமேக் ஆகிவருவது குறிப்பிடத்தக்கது.

Comments