'சிறுத்தை' வசூல் சாதனையை 3 நாட்களில் முறியடித்த 'சகுனி'!!!

Thursday, 28th of June 2012
சென்னை::தமிழ் சினிமாவின் வசூல் ஹீரோக்களின் பட்டியலில் நிலையான இடத்தைப் பிடித்திருக்கும் கார்த்தி, 'சகுனி' யின் மூலம் தனது முந்தைய படமான 'சிறுத்தை' யின் வசூலை மூன்றே நாட்களில் முறியடித்து சாதனை படைத்திருக்கிறார்.

திரையிட்ட 1154 திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடும் சகுனியின் இந்த வெற்றியை கொண்டாட பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சில திரையரங்க உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் கலந்துகொண்டார்கள்.

கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரத்தின் மகன் வள்ளியப்பன் பேசுகையில், "இந்த இளம் வயதிலே கார்த்தி இப்படி ஒரு அரசியல் படத்தில் நடித்திருக்கிறார் என்றால் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்பதை உறுதிபடுத்துகிறது. சிவகுமாருக்க இரண்டு மகன்களில் ஒருவர் எம்.ஜி.ஆர். ஒருவர் சிவாஜி என்று சொன்னார்கள் அதில் கார்த்தி தான் எம்.ஜி.ஆர் என்று நான் நினைக்கிறேன்." என்றார்.

ஏற்கனவே எம்.ஜி.ஆர், சிவாஜி சர்ச்சைக்கே பதில் சொல்லமுடியாமல் தவிக்கும் கார்த்திக்கு, அடுத்த சோதனையை ஏற்படுத்திய வள்ளியப்பன் பேச்சை தொடர்ந்து பேசிய கலைபுலி ஜி.சேகரன், "நாலு படம் நல்லா ஓடினா உடனே அரசியலுக்கு வருவாரா. என்று பேசுவாங்க. இவங்களோட ஆசை வார்த்தையை கேட்டு அரசியலுக்கலாம் போயிடாதிங்க கார்த்தி. ரசிகர்களுடைய ரசனையை புரிந்து நல்ல வசூல் படங்களாக நடிக்கும் நீங்கள் தொடர்ந்து நடிகராகவே இருங்கள். என்று கூறினார்.

பிறகு பேசிய நாசர், "தொடர்ந்து நான்கு வெற்றி படங்களில் நடித்தால் உடனே அந்த நடிகரை அரசியலுக்கு வாங்கன்னு அழைக்கும் தூவத்தை இந்த மேடையையோட நிறுத்திக்குங்க ப்ளீஸ்." என்று ஒரே போடாக போட்டார்.

அத்தனை பேருடைய பேச்சையும் மிரண்டு போய் கேட்டுகொண்டிருந்த கார்த்தி பேசுகையில், "இந்தப் படம் அரசியல் சம்மந்தமான படமா இல்லையா என்றெல்லாம் நாங்கள் யோசிக்க வில்லை. மக்களுக்கு பிடிக்கும் படமாகதான் இதை எடுக்க நினைத்தோம். முதல்வன், தூள் போன்ற படங்களின் சாயல் இருக்குமோ என்றெல்லாம் சிலர் நினைத்தாலும், அதையெல்லாம் யோசிக்காமல் மக்கள் ரசித்தால் போதும் என்ற முடிவில் தான் இப்படத்தை எடுத்தோம்." என்றார்.

தமிழில் செய்த வசூலைப் போலவே ஆந்திராவிலும் இப்படம் பெரும் வசூலை ஈட்டியிருக்கிறதாம்.

Comments