'இசை இளவல்' ஜி.வி. பிரகாஷ் குமாரின் 25-வது பிறந்தநாள்!!!

Thursday,14th of June 2012
சென்னை::தமிழ் சினிமா உலகின் இசையமைப்பாளர்களில் தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். மிகவும் இளம்வயதிலேயே இசையமைப்பாளர், பாடகர், இசை வல்லுனர் என பன்முகங்களை கொண்டதால்தான் ரசிகர்களால் 'இசை இளவல்' என அன்போடு அழைக்கப்படுகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார்.

இன்று இவர் தனது 25-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். வசந்த பாலனின் இயக்கத்தில் பல விருதுகளை வென்ற 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், அஜித் குமாரின் 'கிரீடம்', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'குசேலன்', 'அங்காடித் தெரு', 'ஆயிரத்தில் ஒருவன்', தேசிய விருதுகளை அள்ளிக் குவித்த 'ஆடுகளம்', விக்ரமின் 'தெய்வ திருமகள்' என இவரது இசையமைப்பின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தனது இசை ராசாங்கத்தை நடத்த ஆரம்பித்திருக்கும் இந்த இசை இளவல், தற்போது கார்த்தியின் சகுனி படத்தில் பிஸியாக உள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் 'ஏன் என்றால் காதல் என்பேன்', பாரதிராஜாவின் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்', விக்ரமின் 'தாண்டவம்', 'நான் ராஜாவாகப் போகிறேன்', பாலாவின் 'பரதேசி', சேரன் இயக்கும் 'ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை', விக்ரமின் 'கரிகாலன்', சமுத்திரக்கனி இயக்கும் 'நிமிர்ந்து நில்' என இவர் இசையமைக்க இருக்கும் படங்களின் வரிசை நீண்டு கொண்டிருக்கிறது.

இன்று தனது 25-வது பிறந்தநாளை கொண்டாடி மகிழும் இசை இளவல் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு மாலைமலர் சினிமா இணையதளம் அதன் வாசகர்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Comments