தமிழ் சினிமாவிற்கு தேனி கொடுத்த கொடை 'கிழக்கு பாத்த வீடு' - வைரமுத்து பேச்சு!!!

Wednesday,May,02,2012
தேனி சின்னமாயன் பிலிம்ஸ் சார்பில் தேனி என்.சின்னமாயன் மற்றும் என்.சி.ஜெகன் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'கிழக்கு பாத்த வீடு' எஸ்.பி.பாலகுருசாமி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, 32 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

புதுமுகங்கள் பரதன், தமலி நடித்திருக்கும் இப்படத்தில் தேசிய விருது பெற்ற தம்பிராமையா, அப்புக்குட்டி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மரியா மனோகர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மே 1ஆம் தேதியன்று சென்னை, கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தானு, இயக்குநர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, "கிழக்கு பாத்த வீடு என்றாலே அது ராசியான வீடுதான். இப்படத்திற்கு பாடல்கள் எழுதும் போது எனக்கு கிழக்கு சீமையிலே படத்தின் ஞாபகம் தான் வந்தது. இப்படத்தின் ஹீரோ, ஹீரோயின், தயாரிப்பாளர், இயக்குநர், நான் உட்பட அனைவருமே தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தான். தேனிக்காரர்கள் சேர்ந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். தேனி தமிழ் சினிகாவுக்கு கொடுத்த கொடை 'கிழக்கு பாத்த வீடு' என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படத்தின் கதை உண்மைச் சம்பவம். இயக்குநர் பாலகுருசாமி தான் பார்த்த உண்மை சம்பவத்தை எதார்த்தமான முறையில் காட்சிப் படுத்திருக்கிறார். இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் யாரும் கண்ணீர் விடாமல் இருக்க முடியாது. அப்படி நீங்கள் அழவில்லை என்றால், உங்களுடைய இதயத்தை நீங்கள் வீட்டில் வைத்து விட்டு வந்திருக்கீறீர்கள் என்று அர்த்தம்." என்றார்.

பாரதிராஜா பேசுகையில், "ஒரு காலத்தில் தேனியில் இருந்து சினிமாவை தேடி சென்னைக்கு நாங்கள் வந்தோம். இன்று தமிழ் சினிமா தேனிக்கு போகிறது. சின்னமாயன் போன்றவர்களெல்லாம் படம் தயாரிப்பார்கள் என்று நினைத்திருக்கிறோமா. அந்த அளவுக்கு தேனி மண் சிறந்த மண்ணாகும். நான் பிறந்த மண் என்பதால் நான் சொல்லவில்லை. பொதுவாகவே அந்த மண்ணுக்கும், கலைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது." என்றார்.

Comments