மூத்த நடிகை சண்முக சுந்தரி மரணம்!

Tuesday, May, 01, 2012
மூத்த நடிகையும், நடிகை - பின்னணி பாடகி டி கே கலாவின் தாயாருமான சண்முகசுந்தரி நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 75.

கடந்த 45 ஆண்டுகளாக 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ள பழம்பெரும் தமிழ் நடிகை சண்முகசுந்தரி. இவர் எம்.ஜி.ஆருடன் 'இதயக்கனி', 'நீரும் நெருப்பும்', 'கண்ணன் என் காதலன்', 'என் அண்ணன்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜியுடன் 'லட்சுமி கல்யாணம்,' 'வடிவுக்கு வளைகாப்பு' படங்களிலும், ஜெமினியுடன் 'மாலதி' படத்திலும் நடித்துள்ளார்.

காமெடி கிங் கவுண்டமணியின் மாமியாராக ஒரு படத்தில் அவர் நடித்தார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல படங்களில் கவுண்டமணியுடன் நடித்தார்.

டி.பி.கஜேந்திரன் இயக்கிய 'மிடில் கிளாஸ் மாதவன்', வீ சேகர் இயக்கிய காலம் மாறிப்போச்சு படங்களில் வடிவேலுவின் தாய் கேரக்டரில் நடித்தார். அந்த இரு படங்களிலும் வடிவேலு - சண்முக சுந்தரி காட்சிகள் மிகப் பிரபலமாகின.

ஏராளமான படங்களுக்கு 'டப்பிங்' குரலும் கொடுத்துள்ளார்.

சண்முகசுந்தரிக்கு சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

சண்முகசுந்தரிக்கு டி.கே.கலா, நீலா, மாலா, மீனா, செல்வி என 5 மகள்கள். டி.கே.கலா பிரபல பாடகி. கில்லி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சண்முகசுந்தரி உடல் சாலிகிராமம் மதியழகன் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர் சங்கம் சார்பில் வாகை சந்திரசேகர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நாளை காலை 10 மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் உடல் தகனம் நடைபெறுகிறது
.

Comments