'வயசாயிடுச்சு... இனி ஆக்ஷனுக்கு பை! - ஜாக்கி சான் அதிரடி அறிவிப்பு!!!

Sunday, May, 20, 2012
இனி ஆக்ஷன் படங்களில் நடிக்கப் போவதில்லை... ஒய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார் உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான்.

கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் தனது ஆர்மர் ஆஃப் காட் மூன்றாம் பாகத்தை அறிமுகப்படுத்தியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பரபரப்பான சண்டைக்காட்சிகளில் நடிக்க தன் வயது தடையாக உள்ளதாகவும், நடிப்பு தன்னை களைப்படைய வைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் பிறந்த சீன நடிகர் ஜாக்கி சான். 58 வயதாகும் ஜாக்கி சான் தனது 100வது படமான சைனீஸ் ஜோடியாக்கை (ஆர்மர் ஆப் காட் 3) உருவாக்கி வருகிறார்.

இந்தப் படம்தான் அவரது கடைசி ஆக்ஷன் படமாகும். கேன்ஸ் திரைப்பட விழாவில் சைனீஸ் ஜோடியாக் புரமோஷனுக்காக வந்திருக்கும் ஜாக்கி சான், இந்தப் படத்தோடு நடிப்புக்கு குட்பை சொல்வதாக அறிவித்து, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தார்.

இப்போது அந்தப் படத்தின் மூன்றாவது பாகமாக வருவதுதான் சைனீஸ் ஜோடியாக். டிசம்பரில் இந்தப் படம் வெளியாகிறது.

தனது ஓய்வு குறித்து அறிவித்த ஜாக்கி சான் கூறுகையில், "இன்னும் எத்தனை நாளைக்கு ஆக்ஷன் நாயகனாக நடிப்பது... சண்டை போட்டு போட்டு களைத்துவிட்டது. அதிரடி சண்டைக்கு என் வயசு இடம்கொடுக்கவில்லை.

இப்போது உலகம் ரொம்ப வன்முறைக் களமாக மாறிவிட்டது. உண்மையில் எனக்கு வன்முறை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால்தான் என் படங்களில் சண்டைக் காட்சியைக் கூட நகைச்சுவையாக்கிவிட்டேன்.

கராத்தே கிட் நடிக்கும்போதே, போதும் ஆக்ஷன் என்ற மனநிலைக்கு வந்திருந்தேன்.

சைனீஸ் ஜோடியாக் படத்துக்குப் பின் இனி ஆக்ஷன் படங்களில் நடிக்க மாட்டேன். திரைக்குப் பின்னால் என் பங்களிப்பு இருக்கும். ராபர்ட் டி நீரோ போல, புதிய பரிமாணத்தில் தோன்றத் திட்டமிட்டுள்ளேன்," என்றார்.

Comments