நேபாள விமான விபத்தில் சோகம் : பிரபல குழந்தை நடிகையும் பலி!!!

Tuesday, ,May, ,15, 2012
நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் மட்டுமன்றி, தமிழில் அறிமுகமான குழந்தை நட்சத்திர நடிகையும் அவருடைய அம்மாவும் பரிதாபமாக மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் உள்பட விபத்தில் மரணம் அடைந்த 15 இந்தியர்களின் உடல்களையும் சொந்த ஊருக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நேபாளத்தில் அக்னி ஏர் என்ற தனியார் நிறுவன விமானம், பொகாராவில் இருந்து நேற்று காலை ஜோம்சாம் விமான நிலையத்துக்கு சென்றது. அங்கு விமானம் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக மலை உச்சியில் மோதி கீழே விழுந்தது. இதில் 13 இந்தியர்கள் உள்பட 15 பேர் இறந்தனர். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த இன்ஜினியர் ஸ்ரீகாந்த், மனைவி லதா, மகள்கள் ஸ்ரீவர்த்தினி (9), ஸ்ரீபதா (6) ஆகியோர் சுற்றுலா சென்றனர். மேலும், கும்பகோணத்தை சேர்ந்த ஆன்மீக குழுவினரும் நேபாளம் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற விமானம்தான் விபத்தில் சிக்கி நொறுங்கி உள்ளது. இதில் லதா, ஆன்மீக குழுவை சேர்ந்த அர்ச்சகர் சுதர்சன் பட்டாச்சாரியார் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். ஸ்ரீகாந்த் உள்பட மற்றவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த தகவல் லதாவின் மாமனார் சீனிவாசனுக்கும், சுதர்சன் பட்டாச்சாரியாரின் சகோதரர் சவுந்தர்ராஜனுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான விபத்தில் தமிழ் நடிகை ஒருவரும் இறந்தது தற்போது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் அஜ்மல் ஹீரோவாக நடிக்கும் படம் ‘வெற்றிச்செல்வன்Õ. இப்படத்தில் 2வது கதாநாயகியாக நடித்து வந்தவர் தருணி.

மும்பையை சேர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் படத்தில் அறிமுகமான தருணி ஏற்கனவே மலையாளத்தில் ‘வெள்ளி நட்சத்திரம்Õ, ‘சத்யம்Õ படங்களில் நடித்திருக்கிறார். வெற்றிச்செல்வன் படத்தின் ஹீரோயின் ராதிகா ஆப்தேவுடன் தருணி நடித்த காட்சிகள் சமீபத்தில் ஊட்டியில் படமானது. வரும் 25ம் தேதி மீண்டும் சென்னையில் நடக்கவிருந்த ஷூட்டிங்கில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார் தருணி. இதற்கிடையில் நேபாளத்தில் உள்ள கோயிலில் சாமி கும்பிட அம்மாவுடன் சென்றார். அப்போதுதான் விபத்தில் சிக்கி இறந்துள்ளார். தருணி இறந்த தகவலை வெற்றிச்செல்வன் பட இயக்குனர் ருத்ரனுக்கு, தருணியை அறிமுகம் செய்து வைத்த கோ ஆர்டினேட்டர் ருக்மணி என்பவர் இன்று காலை தெரிவித்தார். அதைக் கேட்டு இயக்குனர் அதிர்ச்சி அடைந்தார். தருணி இறந்தது பற்றி இயக்குனர் ருத்ரன் கூறியதாவது: வெற்றிச்செல்வன் படத்தில் அஜ்மல், ராதிகா ஆப்தே ஜோடியாக நடிக்கின்றனர். ராதிகாவின் தோழியாக தருணி நடிக்கிறார். ஏற்கனவே நான் இயக்கிய விளம்பர படங்களில் தருணி நடித்திருக்கிறார். இந்தியில் அமிதாபச்சன், அபிஷேக் பச்சன் நடித்த ‘பாÕ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழில் இப்போதுதான் அறிமுகமாகிறார். சமீபத்தில் ஊட்டியில் நடந்த ஷூட்டிங்கில் தருணி கலந்து கொண்டார். ராதிகாவுடன் அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. எப்போதும் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார். ஷூட்டிங்கில் எந்த இடையூறும் செய்ய மாட்டார். சொன்ன நேரத்துக்கு ரெடியாகி வந்துவிடுவார். பூண்டு சேர்க்காமல் உணவு கொடுங்கள் என்று மட்டும் கேட்பார். மற்றபடி இதுவேண்டும், அதுவேண்டும் என்று பந்தா செய்ய மாட்டார். ஜீன்ஸ், மல்டி கலர் டாப்ஸ் காஸ்ட்யூம் ஒன்றை விரும்பி அணிவார். நேபாளத்துக்கு கோயிலுக்கு செல்ல போகிறேன். எனக்கு பிடித்த ஜீன்ஸ், மல்டி கலர் டாப்ஸ் அனுப்பி வையுங்கள் என்று விரும்பி கேட்டார்.

அதை பார்சலில் அனுப்பி வைத்தேன். 2 நாட்களுக்கு முன்புதான் அது அவருக்கு கிடைத்திருக்கிறது. ‘25ம் தேதி ஷூட்டிங் வந்துவிடுவேன் டிக்கெட் போட்டு வையுங்கள்Õ என்று கூறினார். இதுதான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை. ஷூட்டிங் ஏற்பாடுகள் செய்து வந்தேன். இந்நிலையில்தான் தருணியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த கோ ஆர்டினேட்டர் இன்று காலை எனக்கு போன் செய்து விமான விபத்தில் தருணியும் அவரது அம்மாவும் இறந்தது பற்றி தகவல் தெரிவித்தார். அதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். தருணி நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருந்த நிலை யில் இறந்துவிட்டார். அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்கும் எண்ணம் இல்லை. அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெறும். அதை வெட்டும் எண்ணமும் கிடையாது. இதுதான் அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாக இருக்கும். இவ்வாறு ருத்ரன் கூறினார். குழந்தை நட்சத்திரமான தருணி விமான விபத்தில் மரணம் அடைந்தது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள் நேபாளத்துக்கு விரைந்துள்ளனர். உடல்களை சென்னை கொண்டுவர நடவடிக்கை நேபாள விமான விபத்தில் பலியான சென்னையை சேர்ந்த லதா, கும்பகோணத்தை சேர்ந்த சுதர்சன் பட்டாச்சாரியார், குழந்தை நட்சத்திரம் தருணி, அவருடைய அம்மா ஆகிய 4 பேரின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தவிர விபத்தில் இறந்த மற்ற இந்தியர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களுடைய சொந்த ஊருக்கு உடல்களை அனுப்பி வைக்க தூதரக அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Comments