பாமக எதிர்ப்பு எதிரொலி: விஜய் தம்மடிக்கும் காட்சி நீக்கம் - இயக்குநர் முருகதாஸ்!!!

Monday, May, 07, 2012
பாமகவின் அமைப்பான பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்பு காரணமாக துப்பாக்கி படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டது.

துப்பாக்கி படத்தில் விஜய் ஸ்டைலாக புகைபிடிப்பது போல சென்னை நகர் எங்கும் சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் வெளியானது. இதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்தது. பசுமை தாயகம் அமைப்பு மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதியது.

நடிகர்கள் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளது என்றும், அதையும் மீறி இவை ஒட்டப்பட்டு உள்ளது என்றும் அந்த அமைப்பு தன் கடிதத்தில் குற்றம்சாட்டியது.

முகப்ரேரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகை பிடிக்கும் போஸ்டர்களை அகற்றும்படி புகார் அளித்தார்.

"புகை பிடிப்பதால் இளைஞர் சமுதாயத்தினர் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிரபல நடிகர்களின் புகைபிடிக்கும் போஸ்டர்கள் அவர்களை தவறாக வழி நடத்தும்", என்றும் புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

ஆரம்பத்தில் இந்தக் காட்சிகளை நீக்கமாட்டேன் என இயக்குநர் முருகதாஸ் பிடிவாதமாக இருந்தார்.

ஆனால் இப்போது நீக்கிவிட சம்மதித்துள்ளார். இதுகுறித்து முருகதாஸ் கூறுகையில், "விஜய் புகைபிடிப்பது போன்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் படத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று புகை பிடிக்கும் சீன்கள் எதுவும் படத்தில் இல்லை. விஜய் புகை பிடிப்பது போல் ஒரு காட்சியை மட்டும் போட்டோ ஷூட்டில் எடுத்தோம். அதையும் படத்தில் இருந்து நீக்கிவிட்டோம். இனிமேல் விஜய் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்களை விளம்பரத்துக்கு பயன்படுத்த மாட்டோம்," என்றார்.

Comments