நடிகர் ராம் சரண் திருமணம்: திருப்பதி கோவிலில் அழைப்பிதழ் வைத்து சிரஞ்சீவி மனைவி வழிபாடு!!!

Sunday, May, 20, 2012
காங்கிரஸ் எம்.பி.யும் நடிகருமான சிரஞ்சீவி மகன் ராம் சரண். இவரும் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். ராம் சரனுக்கும் அப்பல்லோ மருத்துவமனை சேர்மன் பிரதாப் ரெட்டி பேத்தி உபாஷனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14-ந்தேதி இவர்களது திருமணம் நடக்கிறது. திருமண ஏற்பாடுகளை சிரஞ்சீவி குடும்பத்தினர் பிரமாண்டமாக செய்து வருகிறார்கள்.

திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு விட்டது. திருமண அழைப்பிதழுடன் சிரஞ்சீவி மனைவி சுரேகா நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அர்ச்சகர் மூலம் ஏழுமலையான் பாதத்தில் அழைப்பிதழ் வைத்து வழிபட்டார். பின்னர் பத்திரிகையை உண்டியலில் போட்டார்.

இதேபோல் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்றும் அவர் வழிபட்டார். தாயாருக்கு பட்டு புடவை சாத்தினார். முன்னதாக விஜயவாடாவில் உள்ள கனக துர்க்கா கோவிலுக்கும் சுரேகா சென்று திருமண அழைப்பிதழ் வைத்து வழிபட்டார்.

இது பற்றி சுரேகா கூறும்போது, ஏழுமலையான் சன்னதியில் திருமண அழைப்பிதழ் வைத்து வழிபட்டேன். முதலில் தெய்வத்தின் ஆசி பெற்ற பிறகு மற்றவர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கப்படும் என்றார்.

சுரேகாவுடன் அவரது தங்கை வசுந்தரா சென்று இருந்தார்.

Comments