புத்தம் புதுப் பொலிவுடன் மீண்டும் புதிய பாதை!!!

Saturday, ,May, ,26, 2012
சென்னை::பார்த்திபனுக்கு ஒரே படத்தின் மூலம் ஏற்றம் கொடுத்த படமான புதிய பாதை மீண்டும் திரைக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உருவாகும் புதிய பாதையில் மீண்டும் பார்த்திபனே ஹீரோவாக நடிக்கிறார்.

வித்தியாசமான கதைக் களம், வித்தியாசமான நடிப்பு, புத்தம் புதிய ஹீரோத்தனம் என எல்லாவற்றிலும் வித்தியாசமாக அமைந்த படம் புதிய பாதை. அப்படத்தின் கதையும், பார்த்திபன், சீதா ஜோடிப் பொருத்தமும், தேவாவின் புதிய இசையும் படத்தை தூக்கி நிறுத்தின. பெரும் ஓட்டம் ஓடிய இப்படம் பார்த்திபனையும், சீதாவையும் நிஜ வாழ்க்கையிலும் சேர்த்து வைத்தது.

முதல் படத்திலேயே தேசிய விருதையும் இப்படம் தட்டிச் சென்றது. இப்படத்தை மீண்டும் தூசி தட்டி எடுக்கிறார். அவரே மீண்டும் ஹீரோவாக நடிக்கப் போகிறார். இக்காலத்துக்கு ஏற்றவகையில் கதையில் சின்னதாக மாற்றம் செய்து படத்தை ரீமேக் செய்யப் போகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதுவரை ஒரு தமிழ்ப் படத்தை ரீமேக் செய்வதாக இருந்தால் அதில் வேறு ஹீரோதான் நடித்துள்ளனர். குறிப்பாக பி.யூ சின்னப்பா படங்களை ரீமேக் செய்தபோது எம்.ஜி.ஆர். நடித்தார். ரஜினி படங்களை ரீமேக் செய்தபோதும் வேறு ஹீரோக்களே நடித்தனர். ஆனால் ஒரு ஹீரோவின் படம் பல வருடங்களுக்குப் பின்னர் ரீமேக் செய்யும்போது அதே ஹீரோவே நடிப்பது என்பது உலக வரலாற்றில் இதுவரை இல்லாதது. அந்த வகையில், எனது இந்தப் படம் புதிய உலக சாதனையாகும் என்றார்.

பார்த்திபனுக்கும் பெரிய பிரேக் தற்போது தேவைப்படுகிறது. சிறந்த கலைஞரான அவருக்கு இந்தப் புதிய பாதை மீண்டும் ஒரு புதிய பாதையை திறந்து விடட்டும்.

நல்ல கலைஞர்கள் முடங்கிக் கிடப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, கலா ரசிகர்களுக்கும் கூட கஷ்டமான விஷயம்தான்.

Comments