59வது தேசிய திரைப்பட விருது விழா : அழகர்சாமியின் குதிரைக்கு தங்க தாமரை விருது!!!

Saturday, May, 05, 2012
புதுடெல்லி::அழகர்சாமியின் குதிரை படத்துக்கு தங்க தாமரை தேசிய விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை வித்யா பாலன் பெற்றார். டெல்லியில் 59வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி விருதுகளை வழங்கினார். தமிழில் சிறந்த ஜனரஞ்சக படமாக தேர்வான அழகர்சாமியின் குதிரை படத்துக்கு தங்க தாமரை விருது, மற்றும் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இதில் ஹீரோவாக நடித்த அப்பு குட்டி சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்றார். வெள்ளி தாமரையும், ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது. விமல், இனியா நடித்த ‘வாகை சூடவா’ சிறந்த தமிழ் படத்துக்கான விருது பெற்றது. உமேஷ் குல்கர்னி இயக்கிய மராட்டிய படம் தியோல்,

பியாரி ஆகிய படங்கள் சிறந்த படங்களுக்கான தேசிய விருதை பகிர்ந்து கொண்டன. இந்த படங்களுக்கு தங்க தாமரையும், இரண்டரை லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. சில்க் ஸ்மிதா கதையான தி டர்ட்டி பிக்சர்ஸ் இந்தி படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகை விருதும், தியோல் படத்தில் நடித்த கிரிஷ் குல்கர்னி சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றனர். பஞ்சாப் மொழி பட இயக்குனர் குர்விந்தர் சிங் (படம் ஆன்கே கியோரி டாடான்) சிறந்த இயக்குனர், ‘ஆரண்யா காண்டம்’ பட இயக்குனர் குமாரராஜா தியாகராஜா சிறந்த புதுமுக இயக்குனர், சிறந்த எடிட்டர் கே.எல்.பிரவீன் (ஆரண்யா காண்டம்) விருதுகளை பெற்றனர். மேலும் சிறந்த ஸ்பெஷல் எபக்ட்டுக்காக ஷாருக்கான் நடித்த ரா ஒன் உள்ளிட்ட படங்கள் விருது பெற்றன.

Comments